கொல்கத்தா பகலிரவு டெஸ்ட்: அசத்தி வரும் இந்தியப் பந்துவீச்சாளர்களும் விக்கெட் கீப்பர் சஹாவும்!

முதல் நாள் உணவு இடைவேளையின்போது, வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ஸில், 21.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 73 ரன்கள் எடுத்துத் தடுமாறி வருகிறது.
கொல்கத்தா பகலிரவு டெஸ்ட்: அசத்தி வரும் இந்தியப் பந்துவீச்சாளர்களும் விக்கெட் கீப்பர் சஹாவும்!

கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல்முறையாகப் பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி பங்கேற்றுள்ளது. பிசிசிஐ தலைவா் சௌரவ் கங்குலியின் தீவிர முயற்சியால் கொல்கத்தாவில் பகலிரவு டெஸ்ட் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் இளஞ்சிவப்பு (பிங்க்) நிற பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. டாஸ் வென்ற வங்கதேச கேப்டன், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் மாற்றங்கள் எதுவும் இல்லை. வங்கதேச அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவின் முதல் பகலிரவு டெஸ்டின் முதல் ஓவரை இஷாந்த் சர்மா வீசினார். வங்கதேசத் தொடக்க வீரர்கள் ஆறு ஓவர்கள் வரை மட்டுமே தாக்குப்பிடித்தார்கள். 7-வது ஓவரின் முதல் பந்தில் இம்ருல் கைஸ் விக்கெட்டை இஷாந்த் சர்மா எடுத்தாலும் டிஆர்எஸ் வழியாகத் தப்பித்தார் கைஸ். எனினும் அடுத்த இரண்டாவது பந்தில் எல்பிடபிள்யூ முறையில் அவருடைய விக்கெட்டை வீழ்த்தினார் இஷாந்த் சர்மா. முதல் 20 நிமிடங்களுக்குப் பிறகு இளஞ்சிவப்பு பந்து அதிகமாக ஸ்விங் ஆனதால் சஹாவின் விக்கெட் கீப்பிங் திறமை இன்று முழுமையாக வெளிப்பட்டது. பலசமயங்களில் அவர் பந்தைப் பாய்ந்து பாய்ந்து பிடிக்கவேண்டியதாக இருந்தது. பந்துவீச்சாளர்களுக்கு நிகராக அவரை ரசிகர்களும் நிபுணர்களும் பாராட்டும் விதத்தில் திறமையை வெளிப்படுத்தினார் சஹா. 

11-வது ஓவரில் உமேஷ் யாதவ் கலக்கினார். இரு வீரர்களை ரன் எதுவும் எடுக்க விடாமல் வெளியேற்றினார். மொமினுல் ஹக், ரோஹித் சர்மாவின் அட்டகாசமான கேட்சினால் வெளியேற, அடுத்து வந்த முகமது மிதுனை முதல் பந்திலேயே க்ளீன் போல்ட் ஆக்கினார் உமேஷ் யாதவ். அடுத்ததாக முஷ்ஃபிகுர் ரஹிமும் ரன் எதுவும் எடுக்காமல் ஷமி பந்துவீச்சில் போல்ட் ஆனார். பந்து அதிகமாக ஸ்விங் ஆனதால் ஐந்து ஸ்லிப்களை வைத்து விளையாடினார் கோலி. 

52 பந்துகள் வரை தாக்குப்பிடித்த ஷத்மன் இஸ்லாம், 29 ரன்களில் சஹாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசியதால் ஆரம்பத்தில் சுழற்பந்துவீச்சாளர்களை அறிமுகப்படுத்த வேண்டிய தேவை கோலிக்கு ஏற்படவில்லை. 19-வது ஓவரில்தான் ஜடேஜா பந்துவீச வந்தார். மஹ்முதுல்லா, சஹாவின் சூப்பர் கேட்சினால் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். பிறகு, முஹமது ஷமி வீசிய பந்து லிட்டன் தாஸ் ஹெல்மெட்டில் பட்டதால் அவர் தர்மசங்கடமாக உணர்ந்தார். இதையடுத்து, ரிடையர்ட் ஹர்ட் முறையில் அவர் வெளியேறினார். 

முதல் நாள் உணவு இடைவேளையின்போது, வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ஸில், 21.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 73 ரன்கள் எடுத்துத் தடுமாறி வருகிறது. இந்தியப் பந்துவீச்சாளர்களில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளும் இஷாந்த் சர்மா 2 விக்கெட்டுகளும் ஷமி 1 விக்கெட்டும் எடுத்துள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com