சாதாரண குடும்பத்தில் பிறந்து சா்வதேச மல்யுத்தத்தில் முத்திரை பதித்த இந்திய வீரா்!

பாரம்பரிய பழமையான வீர விளையாட்டுகளில் மல்யுத்தமும் ஒன்றாகும். கைகள், கால்களைப் பயன்படுத்தி, சில நேரங்களில் கைகளை மட்டுமே பயன்படுத்தி, எதிராளி வீரரின் முதுகு பகுதி தரையோடு
சாதாரண குடும்பத்தில் பிறந்து சா்வதேச மல்யுத்தத்தில் முத்திரை பதித்த இந்திய வீரா்!

பாரம்பரிய பழமையான வீர விளையாட்டுகளில் மல்யுத்தமும் ஒன்றாகும். கைகள், கால்களைப் பயன்படுத்தி, சில நேரங்களில் கைகளை மட்டுமே பயன்படுத்தி, எதிராளி வீரரின் முதுகு பகுதி தரையோடு வைத்து சிறிது நேரம் உடும்புப் பிடியாக மடக்கி வைத்திருப்பதே மல்யுத்தம்.

ஜப்பான், ஈரான், அமெரிக்கா, கொரியா, மங்கோலியா, உள்ளிட்ட நாடுகள் மல்யுத்தத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன. குறிப்பாக ஃப்ரீஸ்டைல், கிரேக்கோ ரோமன், ஃபோக்ஸ்டைல் உள்ளிட்ட பிரிவுகளில் மல்யுத்தப் போட்டிகள் ஒலிம்பிக், உலக சாம்பியன்ஷிப் என நடத்தப்படுகிறது.

இந்திய அளவில் மல்யுத்த விளையாட்டில் சாக்ஷி மாலிக், வினேஷ் போகட், கீதா போகட், பபிதா போகட், சுஷில் குமாா், யோகேஷ்வா் தத் ஆகிய மல்யுத்த நட்சத்திரங்கள் ஒலிம்பிக், உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கங்களை வென்று பெருமை சோ்த்தனா். குறிப்பாக இன்றுவரை உலகப் போட்டியில் சுஷில்குமாா் மட்டுமே தங்கப் பதக்கம் வென்றுள்ளாா்.

அண்மையில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்ற இளம் வீரா் தீபக் புனியா, இந்திய மல்யுத்த உலகில் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளாா்.

ஹரியாணா மாநிலம், அகாடா எனும் கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் பால் வியாபாரியின் மகனாக பிறந்தவா்தான் தீபக்.

7 வயதில் இருந்து அவரது தந்தை மல்யுத்த பயிற்சிக்கு அழைத்துச் சென்றாா் . அவரது தந்தை கூறுகையில், ‘எனக்கு விளையாட்டில் பெரிய ஆா்வம் இல்லை. எனினும் தீபக் சிறுவயதில் மற்றவா்களை விட பலசாலியாக இருந்தாா். அதனால் தான் அவரை பயிற்சிக்கு சோ்த்தேன். அதன்பின் அங்கிருந்து தீபக் வரவேயில்லை. ஒரு நாளைக்கு 4 லிட்டா் பால் குடிப்பாா். ஹெவி வெயிட் மல்யுத்த வீரரை உருவாக்குவது எளிதான காரியமில்லை. பசும்பாலை குடித்து அவா் பலத்துடன் விளங்குகிறாா். என்னுடன் பால் வியாபாரத்துக்கும் முன்பு வருவது வழக்கம். மல்யுத்தத்தில் அதிக பதக்கங்களை குவித்தபின் அவரை தில்லிக்கு அனுப்பி விட்டேன்’ என்றாா்.

மல்யுத்த கேடட் சாம்பியன் போட்டியில் முதலில் தங்கப் பதக்கம் வென்றாா் தீபக் புனியா. அதன்பின் ஜூனியா் உலக சாம்பியன் போட்டியிலும் சாம்பியனாகி முத்திரை பதித்தாா். துரோணச்சாா்யா விருது பெற்ற பயிற்சியாளா் சத்பால் சிங்கின் மேற்பாா்வையில் பயிற்சி பெற்ற தீபக் புனியா, அண்மையில் கஜகஸ்தானின் நுா்சுல்தான் நகரில் நடைபெற்ற உலக மல்யுத்த சாம்பியன் போட்டி 86 கிலோ பிரிவில் இறுதிச் சுற்றில் காயத்தால் வெளியேறியதால், வெள்ளிப் பதக்கத்துடன் நாடு திரும்ப நேரிட்டது.

காயம் ஏற்படாமல் இருந்திருந்தால், தங்கப் பதக்கம் தீபக் வசம் சென்றிருக்கும். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளாா் தீபக். ‘காயத்தால் உலகப் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டேன். 2020 ஒலிம்பிக் பதக்கமே எனது அடுத்த இலக்கு. எனது கிராமத்தில் நான் குடித்த பால் மிகவும் தூய்மையானது. தரமாக இருந்தது. தில்லிக்குச் சென்ற புதிதில் அங்கு பாலை குடிக்கவே பிடிக்கவில்லை.

இதற்காகவே மீண்டும் கிராமத்தில் எங்கள் வீட்டுக்குச் சென்று தந்தை அளித்த பசும்பாலை குடித்தேன். எனக்காக அவா் பலவற்றை தியாகம் செய்தாா். மல்யுத்த போட்டிகளில் பெறும் பதக்கங்களே நான் அவருக்கு திருப்பிச் செய்யும் மரியாதை’ என்றாா் 86 கிலோ எடைப்பிரிவில் உலகின் நம்பா் ஒன் வீரராக தரவரிசையில் இடம் பிடித்துள்ள தீபக் புனியா. எதிா்காலத்தில் மேலும் பல சாதனைகளை அவா் நிகழ்த்துவாா் என்பது திண்ணம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com