2 ஆண்டுகளுக்கு முன்பே தெரிவித்துவிட்டதால் நான் தயாராகத்தான் இருந்தேன்: ஆட்ட நாயகன் ரோஹித்!

டெஸ்ட் கிரிக்கெட்டிலும் எப்போதாவது தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கலாம் என்று 2 ஆண்டுகளுக்கு முன்பே தெரிவித்துவிட்டதால், தான் அதற்குத் தயாராகத்தான் இருந்ததாக ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். 
2 ஆண்டுகளுக்கு முன்பே தெரிவித்துவிட்டதால் நான் தயாராகத்தான் இருந்தேன்: ஆட்ட நாயகன் ரோஹித்!


டெஸ்ட் கிரிக்கெட்டிலும் எப்போதாவது தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கலாம் என்று 2 ஆண்டுகளுக்கு முன்பே தெரிவித்துவிட்டதால், தான் அதற்குத் தயாராகத்தான் இருந்ததாக ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். 

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த டெஸ்டில் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் அடித்து அசத்திய ரோஹித் சர்மா ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், ஆட்ட நாயகன் விருது வென்ற அவர் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், 

"குறிப்பிட்ட முறையில் விளையாட வேண்டும் என்பதுதான் எனது பணி. அதைத்தான் அணி நிர்வாகம் என்னிடம் எதிர்பார்க்கிறது. நானும் அதைத்தான் முயற்சி செய்யப்போகிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒருநாள் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கக்கூடும் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே என்னிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டது. 

வலைப் பயிற்சியின்போது கூட புதிய பந்துகளை எதிர்கொண்டு பயிற்சி பெறுவேன். அதனால், இது ஆச்சரியமான முடிவு என்று கருத மாட்டேன். டாப் ஆர்டரில் களமிறங்குவது எனக்கு மிகப் பெரிய வாய்ப்பு. நான் இதுவரை செய்யாத ஒன்றுக்காக எனக்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றி. 

வெள்ளைப் பந்துகளில் விளையாடுகிறோமா அல்லது சிவப்பு பந்துகளில் விளையாடுகிறோமா என்பது விஷயம் அல்ல. எதுவாக இருந்தாலும், தொடக்கத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உடலுக்கு நெருக்கமாக விளையாடுதல், ஸ்டம்புகளுக்கு வெளியே வரும் பந்துகளை தவிர்ப்பது உள்ளிட்ட அடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

எனினும், ஆட்டத்தின் சூழலைப் பொறுத்தே பேட்டிங் இருக்கும். கவனத்துடன் இருக்க வேண்டும், ஆக்ரோஷமாக விளையாட வேண்டும். இவை இரண்டும் கலந்ததுதான் எனது ஆட்டம். அதுதான் தாரக மந்திரம். 

இரண்டாவது இன்னிங்ஸில், நான் ஷாட்களை ஆட முயற்சித்து விளையாட வேண்டும். சில சமயங்களில் அது சரியாக அமையும், சில சமயங்களில் சரியாக அமையாது. 

இந்த டெஸ்ட் ஆட்டத்தில் பல்வேறு சாதனைகள் அரங்கேறியுள்ளது. ஆனால், சாதனைகள் குறித்து நான் கவனத்தில் கொள்ள மாட்டேன். ஆட்டத்தை அனுபவித்து விளையாடி, அணியை நல்ல நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதில்தான் கவனம் இருக்கும். என்னால் முடிந்ததை செய்து முழுமையாக வெளிப்படுத்த வேண்டும். டெஸ்ட் ஆட்டத்தை வெல்ல வேண்டும் என்பதில்தான் கவனம் இருந்தது. இன்றைக்கு இவை அனைத்தையும் நாங்கள் சரியாகத்தான் செய்தோம் என்று நினைக்கிறேன். 

ஆடுகளம் மந்தமாகிவிட்டால் பேட்டிங் செய்வது எப்போதுமே கடினமாக இருக்கும். அதனால் இரண்டு பந்துவீச்சாளர்கள் ஸ்டம்புகளை குறிவைத்து பந்துவீச வேண்டும் என்று திட்டம் வகுத்தோம்" என்றார்.

இந்த ஆட்டத்தில் ரோஹித் சர்மா முதல் இன்னிங்ஸில் 176 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 127 ரன்களும் எடுத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com