டி20 தொடரை வென்றது இலங்கை: பாகிஸ்தான் மீண்டும் படுதோல்வி!

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி, 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது. 
புகைப்படம்: டிவிட்டர் | ஐசிசி
புகைப்படம்: டிவிட்டர் | ஐசிசி
Updated on
1 min read


பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி, 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது. 

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி தலா 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் 2-0 என்ற கணக்கில் வென்றது. 

இதையடுத்து, கடந்த 5-ஆம் தேதி டி20 தொடர் தொடங்கியது. முதல் ஆட்டத்தில் இலங்கை அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இன்று 2-வது ஆட்டம் நடைபெற்றது. 

இதில், டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த அந்த அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பனுகா ராஜபட்சே 48 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து அதிரடியில் மிரட்டினார். 

இதையடுத்து, 183 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. இந்த ஆட்டத்திலும் பாகிஸ்தான் அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. இதனால், அந்த அணி 11 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து திணறியது. எனினும், கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது வந்த வேகத்தில் அதிரடி காட்டி மிரட்டினார். 

ஆனால், அந்த அணி 50 ரன்களைக் கடந்தபோது மீண்டும் விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கியது. அகமது ஷஸாத் 13, உமர் அக்மல் 0, சர்ஃப்ராஸ் 26 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், அந்த அணி 52 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து மீண்டும் திணறியது. 

ஆசிப் அலி மற்றும் இமாத் வாசிம் பாட்னர்ஷிப் அமைத்து விளையாடினர். இந்த இணை 6-வது விக்கெட்டுக்கு 75 ரன்கள் சேர்த்த நிலையில், இமாத் வாசிம் 29 பந்துகளில் 47 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனால், பாகிஸ்தான் அணி மீண்டும் சரிவைச் சந்தித்து விக்கெட்டுகளை இழந்தது. 

இதனால், அந்த அணி 19 ஓவர்கள் முடிவில் 147 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

இலங்கை அணித் தரப்பில் நுவான் பிரதீப் 4 விக்கெட்டுகளையும், வானிந்து ஹஸரங்கா 3 விக்கெட்டுகளையும், இசுரு உடானா 2 விக்கெட்டுகளையும், கசுன் ரஜிதா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 

முதலிரண்டு டி20 ஆட்டத்திலும் வென்றதன் மூலம், இலங்கை அணி பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது. இரு அணிகளுக்கிடையிலான கடைசி மற்றும் 3-வது டி20 தொடர் வரும் 9-ஆம் தேதி நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com