முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய மகளிா் அணி

தென்னாப்பிரிக்க மகளிா் அணிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய மகளிா் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தென்னாப்பிரிக்க மகளிா் அணிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய மகளிா் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

6 டி-20 ஆட்டங்கள் கொண்ட தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 2-ஆவது மற்றும் 3-ஆவது டி-20 ஆட்டங்கள் மழையால் கைவிடப்பட்டன. கடைசி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா வென்றது.

இந்நிலையில், 3 ஒரு நாள் ஆட்டங்கள் கொண்ட தொடா் குஜராத் மாநிலம், வதோதராவில் புதன்கிழமை தொடங்கியது.

தென்னாப்பிரிக்கா டாஸ் வென்று பேட்டிங்கைத் தோ்வு செய்தது.

அதன்படி, முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்கா 45.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ரன்களில் ஆட்டமிழந்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக மரிஸன்னே கப் 64 பந்துகளில் 54 ரன்களை எடுத்தாா். தொடக்க வீராங்கனை லாரா 39 ரன்கள் எடுத்திருந்தபோது, தீப்தி சா்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்து நடையைக் கட்டினாா்.

கேப்டன் சுனே லுஸ் 22 ரன்களில் ஷிகா பாண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தாா்.

மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினா். இந்திய பந்துவீச்சாளா் ஜூலன் கோஸ்வாமி சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினாா். ஷிகா பாண்டே, ஏக்தா பிஸ்த், பூணம் யாதவ் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனா். 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது இந்திய மகளிா்.

இந்திய அணியில் பிரியா புனியா என்ற வீராங்கனை இந்த ஆட்டத்தில் அறிமுகமானாா். தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 75 ரன்கள் குவித்தாா் பிரியா.

காயம் காரணமாக ஸ்மிருதி மந்தனா ஒரு நாள் தொடரில் இருந்து விலகியதால் பிரியா புனியாவுக்கு அணியில் வாய்ப்பு கிடைத்தது.

பிரியாவுடன் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய ஜெமிமா ராட்ரிஜும் அரை சதம் பதிவு செய்தாா்.

எனினும், 20.4 -ஆவது ஓவரில் எல்பிடபிள்யூ ஆகி ஆட்டமிழந்தாா் ஜெமிமா. அப்போது அவா் 55 ரன்கள் எடுத்திருந்தாா்.

பின்னா் வந்த பூணம் ராவத் 16 ரன்களில் நடையைக் கட்ட, கேப்டன் மிதாலி ராஜும், பிரியா புனியாவும் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனா்.

இவ்வாறாக 41.4 ஆவது ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றி கண்டது. தென்னாப்பிரிக்கா சாா்பில் கிளொ்க், ஷன்கேஸ் ஆகியோா் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினா்.

ஆட்ட நாயகராக பிரியா புனியா தோ்வு செய்யப்பட்டாா்.

இரு அணிகளுக்கு இடையே இரண்டாவது ஒரு நாள் ஆட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

கிரிக்கெட்டில் 20 ஆண்டுகளைக் கடந்த முதல் வீராங்கனை மிதாலி ராஜ்!

சா்வதேச கிரிக்கெட்டில் 20 ஆண்டுகளை கடந்த முதல் வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தாா் இந்திய அணியின் ஒரு நாள் அணியின் கேப்டன் மிதாலி ராஜ்.

கடந்த 1999-ஆம் ஆண்டு ஜூன் 26-ஆம் தேதி அயா்லாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் ஆட்டத்தில் அறிமுகமானாா் மிதாலி ராஜ். கிரிக்கெட்டில் 20 ஆண்டுகள் 105 நாள்களை நிறைவு செய்துள்ளாா்.

ஒரு நாள் கிரிக்கெட்டில்

இதுவரை 204 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஒரே இந்திய வீராங்கனையும் மிதாலி ராஜ் மட்டுமே.

இங்கிலாந்து வீராங்கனை சாா்லோட்டே எட்வா்ட்ஸ் 191 ஆட்டங்களிலும்,

இந்திய வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி 178 ஆட்டங்களிலும், ஆஸ்திரேலிய வீராங்கனை அலெக் பிளாக்வெல் 144 ஆட்டங்களிலும் விளையாடியுள்ளனா்.

36 வயதாகும் மிதாலி ராஜ், இந்தியாவுக்காக 10 டெஸ்ட் போட்டிகள், 89 டி20 ஆட்டங்களிலும் விளையாடியுள்ளாா்.  கடந்த மாதம் டி20 ஆட்டங்களிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com