கோலியின் முடிவு என்ன?: 275 ரன்களுக்கு ஆட்டமிழந்த தெ.ஆ. அணி! அஸ்வினுக்கு 4 விக்கெட்டுகள்!

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில் 275 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.
கோலியின் முடிவு என்ன?: 275 ரன்களுக்கு ஆட்டமிழந்த தெ.ஆ. அணி! அஸ்வினுக்கு 4 விக்கெட்டுகள்!

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில் 275 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஏற்கெனவே டி20 தொடா் 1-1 என சமநிலையில் முடிந்தது. இதையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடா் நடைபெற்று வருகிறது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது டெஸ்ட் புணேவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியின் முதல் இன்னிங்ஸை 601/5 ரன்களில் டிக்ளேர் செய்தார் கோலி. கோலி 254 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இது அவருடைய அதிகபட்ச டெஸ்ட் ரன்களாகும். 2-வது நாளின் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில், 15 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்துத் தடுமாறி வருகிறது. டி புருயன் 20, அன்ரிச் 2 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

துரதிர்ஷ்டவசமாக தென் ஆப்பிரிக்க அணியின் தடுமாற்றம் இன்றும் தொடர்ந்தது. நைட்வாட்ச்மேன் அன்ரிச் நாா்ட்ஜே ஷமியின் பந்துவீச்சில் கோலியின் அற்புதமான கேட்சினால் 3 ரன்களில் வெளியேறினார். அடுத்தச் சில ஓவர்களில், நன்கு விளையாடி 30 ரன்கள் எடுத்த டி புருயின் கொடுத்த கேட்சைப் பாய்ந்து சென்று பிடித்து அவரை வெளியேற்றினார் விக்கெட் கீப்பர் சஹா. இது உமேஷ் யாதவின் மூன்றாவது விக்கெட். இதையடுத்துச் சரிவைத் தடுக்கும் பொறுப்பு டு பிளெஸ்ஸிஸ் - டி காக் வசம் வந்தது. சற்று விரைவாக ரன்கள் சேர்த்த டு பிளெஸ்ஸிஸ் 64 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். 

16 ஓவர்கள் வரை நீடித்த டு பிளெஸ்ஸிஸ் - டி காக் கூட்டணியைப் பிரித்தார் அஸ்வின். 48 பந்துகளில் 31 ரன்களில் சேர்த்த டி காக்கை அற்புதமான பந்தில் வீழ்த்தினார். இதனால் தென் ஆப்பிரிக்காவின் நிலைமை இன்னும் மோசமானது.

3-ம் நாள் மதிய உணவு இடைவேளையின்போது தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில் 42 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் 52, முத்துசாமி 6 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். தென் ஆப்பிரிக்க அணிக்கு 4 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 465 ரன்கள் பின்தங்கியுள்ளது. இதனால் அந்த அணி ஃபாலோ ஆனை எதிர்கொள்ளும் அபாயத்தில் உள்ளது.

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு உடனே முத்துசாமியை 7 ரன்களில் வெளியேற்றினார் ஜடேஜா. அஸ்வினும் ஜடேஜாவும் தொடர்ந்து பந்துவீசி தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு அதிக நெருக்கடி அளித்தார்கள். நிலைத்து நின்று விளையாடிய டு பிளெஸ்ஸிஸை 64 ரன்களில் வெளியேற்றினார் அஸ்வின். இதனால் மீதமுள்ள இரு விக்கெட்டுகளும் எளிதாக வீழ்ந்துவிடும் என ரசிகர்கள் எண்ணினார்கள். ஆனால் பிறகு ஜோடி சேர்ந்த பிலாண்டரும் மஹாராஜாவும் 18.3 ஓவர்கள் வரை விளையாடி 35 ரன்கள் சேர்த்தார்கள்.

3-ம் நாள் தேநீர் இடைவேளையின்போது தென் ஆப்பிரிக்க அணி 77 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்தது. 2 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்க அணி, 404 ரன்கள் பின்தங்கியிருந்தது.

உணவு இடைவேளைக்குப் பிறகும் மஹாராஜா - பிலாண்டர் கூட்டணி மிக நம்பிக்கையுடன் விளையாடி இந்தியப் பந்துவீச்சாளர்களை வெறுப்பேற்றியது. ஒரு நல்ல பேட்ஸ்மேனுக்கு நிகராக விளையாடிய மஹாராஜா 96 பந்துகளில் அரை சதமெடுத்தார். ஃபாலோ ஆன் திட்டத்தில் கோலி இருந்ததால் தொடர்ந்து அஸ்வினையும் ஜடேஜாவையும் பந்துவீசச் செய்து வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஓய்வு கொடுத்தார். ஆனால், இந்த ஜோடி கோலியின் திட்டங்களை முறியடித்தது. இதனால் நிலைமையை மாற்ற உமேஷ் யாதவை அழைத்தார் கோலி. அதுவும் கைகொடுக்கவில்லை. பிறகு மஹாராஜா - பிலாண்டர் கூட்டணி 9-வது விக்கெட்டுக்கு 100 ரன்களை எடுத்து அசத்தியது. இந்த டெஸ்டில் 100-வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்திய மஹாராஜா, சதமும் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 72 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் அவர் ஆட்டமிழந்தார். 43.1 ஓவர்கள் வரை 9-வது விக்கெட்டுக்கு மஹாராஜாவும் பிலாண்டரும் விளையாடியதால் ஆட்டத்தின் நிலைமையே மாறியது. பிறகு, ரபடா 2 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

இதனால் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 105.4 ஓவர்களில் 275 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. பிலாண்டர் 44 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளும் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளும் ஷமி 2 விக்கெட்டுகளும் ஜடேஜா 1 விக்கெட்டும் எடுத்துள்ளார்கள். 

முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 326 ரன்கள் பின்தங்கியதால் இந்திய அணி ஃபாலோ ஆனை அமல்படுத்துமா என்பது நாளை தான் தெரிய வரும். இன்னும் இரு நாள்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில் கேப்டன் கோலி என்ன முடிவெடுப்பார் என்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com