யு-18 உலக செஸ் சாம்பியன் ஆனார் தமிழக வீரர் பிரக்ஞானந்தா!
By எழில் | Published On : 12th October 2019 03:36 PM | Last Updated : 12th October 2019 03:36 PM | அ+அ அ- |

மும்பையில் அக்டோபர் 1-ம் தேதி தொடங்கிய 18 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக யூத் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 14 வயது பிரக்ஞானத்தா யு-18 உலக செஸ் சாம்பியன் ஆகியுள்ளார்.
இந்தியா முதல்முறையாக உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்துகிறது. 66 நாடுகளைச் சேர்ந்த 450 வீரர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். யு-14 போட்டி, யு-14 மகளிர் போட்டி, யு-16 போட்டி, யு-16 மகளிர் போட்டி, யு-18 போட்டி, யு-18 மகளிர் போட்டி ஆகிய பிரிவுகளில் போட்டி நடைபெற்றுள்ளது. இதில் 14 வயதைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, யு-18 பிரிவில் போட்டியிட்டார்.
கடைசி சுற்றுக்கு முன்பு வரை முன்னணியில் இருந்த பிரக்ஞானந்தா, இன்று நடைபெற்ற கடைசிச் சுற்றில் வேலண்டினை எதிர்கொண்டார். டிரா செய்தால் போதும் என்கிற நிலையில் ஆட்டத்தை டிரா செய்து உலக ஜூனியர் செஸ் சாம்பியன் ஆகியுள்ளார் பிரக்ஞானந்தா. இந்தப் போட்டியில் அவர் 7 ஆட்டங்களில் வெற்றியடைந்து, நான்கு ஆட்டங்களை டிரா செய்தார்.
12 வயது 10 மாதம், 13 நாள்களில் செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆன பிரக்ஞானந்தா, இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் என்கிற பெருமையைப் பெற்றார். எனினும் சென்னையைச் சேர்ந்த மற்றொரு இளம் செஸ் வீரர் குகேஷ், 12 வயது ஏழு மாதம் 17 நாள்களில் செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆகி, பிரக்ஞானந்தாவின் சாதனையைப் பின்னுக்குத் தள்ளினார். இந்நிலையில் தற்போது யு-18 உலக சாம்பியன் ஆகியுள்ளார் பிரக்ஞானந்தா.