பாடி பில்டிங் விளையாட்டுக்குக் கிடைத்த அங்கீகாரம்: அர்ஜுனா விருது வீரர் பாஸ்கரன்
By DIN | Published On : 01st September 2019 01:39 AM | Last Updated : 01st September 2019 01:39 AM | அ+அ அ- |

தனக்கு வழங்கப்பட்ட அர்ஜுனா விருது, பாடி பில்டிங் விளையாட்டுக்கு கிடைத்த அங்கீகாரம் என தமிழக வீரர் எஸ்.பாஸ்கரன் கூறியுள்ளார்.
தேசிய விளையாட்டு தினமான 29-ஆம் தேதி புது தில்லியில் நடைபெற்ற விழாவில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு அர்ஜுனா விருதுகளையும், பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா விருதுகளையும் வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
இதில் பாடி பில்டிங் விளையாட்டு வீரரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான பாஸ்கரனுக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.
பாராட்டு விழா: இதையொட்டி, இந்திய பாடி பில்டர்ஸ் கூட்டமைப்பு, தமிழ்நாடு பாடி பில்டர்ஸ் சங்கம் சார்பில் சென்னையில் சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. ஐபிபிஎஃப் பொதுச் செயலாளர் சேத்தன் பதாரே தலைமை தாங்கினார். தலைவர் பிரேம் சந்த் தெக்ரா முன்னிலை வகித்தார். தமிழ்நாடு சங்க பொதுச் செயலாளர் அரசு, ரயில்வே விளையாட்டு வாரிய அதிகாரிகள், பாடி பில்டிங் கூட்டமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பின்னர் அர்ஜுனா விருது வீரர் பாஸ்கரன் கூறியதாவது:
கடந்த 20 ஆண்டுகளாக பாடி பில்டிங் விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றேன். கோவில்பட்டியை அடுத்த எட்டயபுரம் தான் எனது சொந்த ஊர். தற்போது சென்னையில் தான் வசித்து வருகின்றேன். கடந்த 2018-இல் புணேயில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப், தாய்லாந்தில் நடைபெற்ற மிஸ்டர் வேர்ல்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றேன். இதனால் எனது பெயர் அர்ஜுனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது.
பொருளாதார வசதி இல்லாத நிலையில் மாநில, உள்ளூர் போட்டிகளில் தான் பங்கேற்று வந்தேன். பின்னர் ரயில்வே விளையாட்டு வாரியம் மூலம் சென்னை ஐசிஎப்பில் பணி வாய்ப்பு கிடைத்தது. ஏராளமான பாடி பில்டிங் வீரர்களுக்கு பல்வேறு மத்திய அரசு துறைகளில் வேலை கிடைக்கிறது.
தற்போது ஏராளமான இளைஞர்கள், இளம் பெண்கள் பாடி பில்டிங்கில் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கான உணவு முறையே தனியாகும். வழக்கம் போல் உணவை சாப்பிட்டால் போதாது. சிறப்பு சத்து நிறைந்த உணவை உண்ண வேண்டும். இதற்கு பெரும் தொகையும் தேவைப்படும்.
எனது தேவைகளை, ஐசிஎப், இந்திய பாடி பில்டிங் கூட்டமைப்பினர் பார்த்துக் கொள்கின்றனர். வரும் நவம்பர் மாதம் தென்கொரியாவில் நடக்கவுள்ள உலக சாம்பியன் போட்டியில் பங்கேற்க உள்ளேன். தமிழகத்தில் பாடி பில்டிங் தொடர்பாக விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது என்றார் பாஸ்கரன்.
ஐபிபிஎஃப் பொதுச் செயலர் சேத்தன் கூறியதாவது: எங்கள் கூட்டமைப்புக்கு மத்திய அரசு அங்கீகாரம் தந்துள்ளது. 45 மாநில சங்கங்கள், மற்றும் பல்வேறு அரசு விளையாட்டு வாரியங்கள் இணைக்கப்பட்டுள்ளன. 5000 ஆண்கள், பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். பாடி பில்டிங்கில் அர்ஜுனா விருது பெறும் 3-ஆவது வீரர் பாஸ்கரன் என்றார்.