விராட் கோலி-ரோஹித் இடையே எந்த மோதலும் இல்லை: ரவிசாஸ்திரி
By DIN | Published On : 11th September 2019 01:17 AM | Last Updated : 11th September 2019 01:17 AM | அ+அ அ- |

கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் இடையே மோதல் நிலவுவதாக கூறுவது அபத்தமானது. எந்த மோதலும் இல்லை என தலைமைப் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
தற்போது இரண்டாவது முறையாக தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், நான் இளம் வீரர்கள் அதிகளவில் உருவாக்க முனைப்பாக உள்ளேன். அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை மற்றும் தற்போது நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்காக இளம் வீரர்கள் மீது கவனம் செலுத்துவோம்.
இளம் வீரர்களை தயாராக்க வேண்டும்: டி20 உலகக் கோப்பை போட்டி நடைபெற இன்னும் 12 மாதங்கள் உள்ளன. டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு 18 முதல் 20 மாதங்கள் வரை உள்ளன. இளம் வீரர்களை தயார்படுத்தினால், அனுபவம் நிறைந்த வீரர்களுடன், நமது அணி வலுவானதாக அமையும். நிலையாக ஆடுவோரும், வலுவான பதிலி வீரர்களும் தேவைப்படுகின்றனர்.
டி20, ஒருநாள், டெஸ்ட் என 3 அம்ச ஆட்டங்களிலும் பேட்டிங், பவுலிங்கை வலுப்படுத்துவோம். புள்ளிகள் அடிப்படையில் உள்ளதால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தீவிர கவனத்துடன் ஆட வேண்டும். கடந்த 3 ஆண்டுகளாக டெஸ்டில் நாம் உலகின் நம்பர் ஒன் அணியாக உள்ளோம்.
இதனால் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இறுதி ஆட்டம் நடைபெறும்போது, நமக்கு சாதகமான நிலையை உருவாக்க வேண்டும்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக உள்ளூரிலும், அவர்கள் மண்ணிலும் ஆட உள்ளோம். மே.இ.தீவுகள் தொடரில் தோல்வியே காணாத அணியாக திகழ்ந்தோம். மே.இ.தீவுகளை அதன் மண்ணிலேயே டி20,ஒருநாள் தொடர்களில் வென்றது மிகவும் சிறப்பானது. இதுபோன்று எதிர்காலத்தில் நடைபெற வாய்ப்பில்லை.
கோலிரோஹித் இடையே மோதல் இல்லை: கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அவர்களுடன் 5 ஆண்டுகளாக தங்கும் அறை, மைதானத்தில் பழகி வருகிறேன். அவர்களிடையே மோதல் உள்ளதாக கூறுவது அபத்தமானது.
அணியின் வெற்றிக்காகவும், மரபுகளை மீறாமல் இருவரும் செயல்பட்டு வருகின்றனர். இதனால் தான் உலகக் கோப்பையில் ரோஹித் 5 சதங்களை விளாசினார். நல்ல செயல்கள் நேரும் போது பேசாமல் உள்ளோம். நடக்காத ஒன்றை நடந்ததாகக் கூறி அதை உண்மையாக்க முயல்கிறோம் என்றார் சாஸ்திரி.