காயம் காரணமாக பென் ஸ்டோக்ஸ் பந்துவீச மாட்டார்: இங்கிலாந்துக்கு பின்னடைவு?
By DIN | Published On : 11th September 2019 07:24 PM | Last Updated : 11th September 2019 07:26 PM | அ+அ அ- |

ஆஸ்திரேலியாவுடனான கடைசி ஆஷஸ் டெஸ்டில் இங்கிலாந்தின் பிரதான ஆல்-ரௌண்டர் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக பந்துவீச மாட்டார் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 5-வது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் ஓவல் மைதானத்தில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. முதல் 4 ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 2 ஆட்டத்தில் வெற்றி பெற்றதால் ஆஷஸை தக்கவைத்தது. எனவே, கடைசி ஆட்டத்தில் ஆறுதல் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய வேண்டிய நெருக்கடியில் இங்கிலாந்து அணி உள்ளது.
மேலும் படிக்க: ஆஷஸ் கோப்பையை தக்க வைத்தது ஆஸ்திரேலியா
இந்நிலையில், கடைசி ஆட்டத்துக்கான விளையாடும் லெவன் அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்தது. இந்த தொடரில் தொடக்கம் முதலே திணறி வரும் ஜேசன் ராய் மற்றும் கடந்த ஆட்டத்தில் களமிறங்கிய வேகப்பந்துவீச்சாளர் ஓவர்டன் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாற்றாக ஆல்-ரௌண்டர்கள் கிறிஸ் வோக்ஸ் மற்றும் சாம் கரண் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும், இங்கிலாந்தின் பிரதான ஆல்-ரௌண்டர் பென் ஸ்டோக்ஸ் தோள்பட்டை காயம் காரணமாக பந்துவீச மாட்டார் என்றும் இந்த ஆட்டத்தில் அவர் வெறும் முழுநேர பேட்ஸ்மேனாக மட்டுமே களமிறங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே, அணியில் கூடுதல் ஆல்-ரௌண்டர்களாக இரண்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எனவே, பென் ஸ்டோக்ஸ் இடத்தை இந்த இரண்டு ஆல்-ரௌண்டர்கள் பூர்த்தி செய்வார்கள் என்ற நம்பிக்கையில் இங்கிலாந்து அணி உள்ளது.
ஆஷஸ் கிரிக்கெட்டில் சாம் கரணுக்கு இதுதான் அறிமுகம் என்பது குறிப்பிடத்தக்கது.