10 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள்: 22-வது டி20 சதம் அடித்தார் கிறிஸ் கெயில்!
By எழில் | Published On : 11th September 2019 12:50 PM | Last Updated : 11th September 2019 12:50 PM | அ+அ அ- |

புகைப்படம்: CPL T20
டி20 கிரிக்கெட்டில் தனது 22-வது சதத்தை அடித்துள்ளார் கிறிஸ் கெயில். எனினும் அவருடைய சதம், அவர் அணி அடித்த 241 ரன்கள் என அனைத்தும் கடைசியில் தோல்வியில் தான் முடிந்துள்ளன.
நேற்று, கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில் கிறிஸ் கெயில் விளையாடும் ஜமைக்கா தல்லாவாஸும் செயிண்ட் கிட்ஸ் & நெவிஸ் பாட்ரியாட்ஸ் அணிகளும் மோதின.
கிறிஸ் கெயில் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை நேற்றும் வெளிப்படுத்தினார். 10 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 62 பந்துகளில் 116 ரன்கள் குவித்தார். இது அவருடைய 22-வது டி20 சதம். கெய்லை விடவும் விரைவாக ரன்கள் குவித்தார் வால்டன். 36 பந்துகளில் 8 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 73 ரன்கள் எடுத்தார். இதனால் ஜமைக்கா தல்லாவாஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் குவித்தது.
இந்த இமாலய ஸ்கோரை அழகாக விளையாடி 18.5 ஓவர்களிலேயே அடைந்தது பாட்ரியாட்ஸ் அணி. தொடக்க வீரரும் விக்கெட் கீப்பருமான டிசி தாமஸ் 40 பந்துகளில் 71 ரன்கள் எடுத்தார். எவின் லூயிஸ் 18 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து, இருவரும் பலமான தொடக்கத்தை தங்கள் அணிக்கு ஏற்படுத்தித் தந்தார்கள். இதனால் 7 பந்துகள் மீதமுள்ள நிலையில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது பாட்ரியாட்ஸ் அணி. இந்த ஆட்டத்தில் மொத்தம் 37 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன.
அதிக டி20 சதங்கள்
கிறிஸ் கெயில் - 22
மைக்கேல் கிலிங்கர் - 8
ஃபிஞ்ச், வார்னர், லூக் ரைட், மெக்கல்லம் - 7
அதிக டி20 சிக்ஸர்கள்
கெயில் - 954
பொலார்ட் - 622
மெக்கல்லம் - 485
வாட்சன் - 431
ரஸ்ஸல் - 391