தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 3-ஆவது டி20 ஆட்டம்: தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா
By DIN | Published On : 22nd September 2019 02:03 AM | Last Updated : 22nd September 2019 02:03 AM | அ+அ அ- |

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3ஆவது டி20 ஆட்டம் பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
தென்னாப்பிரிக்க அணி 3 டி20, 3 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாட இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.
முதலாவது டி20 ஆட்டம், ஹிமாசலப் பிரதேச மாநிலம், தர்மசாலாவில் கடந்த 15ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. எனினும், இடைவிடாத மழை காரணமாக டாஸ் கூட போடாமல் ஆட்டம் கைவிடப்பட்டது.
பஞ்சாப் மாநிலம், மொஹாலியில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற 2ஆவது டி20 ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், 3ஆவது மற்றும் கடைசி ஆட்டம் பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
2ஆவது ஆட்டத்தில் கேப்டன் கோலி 72 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். தவனும் நல்ல திறனுடன் உள்ளார்.
ரிஷப் பந்த் முந்தைய ஆட்டத்தில் சோபிக்கத் தவறினார். அவருக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் உள்ளதால் இந்த ஆட்டம் அவருக்கு முக்கியமானதாகும்.
ரோஹித் சர்மா, தவன், ஹார்திக் பாண்டியா, ஸ்ரேயஸ் ஐயர், க்ருணால் பாண்டியா, ஜடேஜா, கோலி என பேட்டிங்கில் இந்திய அணி வலிமையாக உள்ளது.
பந்துவீச்சை பொறுத்தவரை தமிழகத்தைச் சேர்ந்தவரான வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர், நவ்தீப் சைனி, ஆகியோர் உள்ளனர். இந்த ஆட்டத்தில் கலீல் அகமதுக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என்று தெரிகிறது.
தென்னாப்பிரிக்காவைப் பொறுத்தவரை குவின்டன் டி காக், டெம்பா பவுமா ஆகியோர் நல்ல ஆட்டத் திறனை மொஹாலி ஆட்டத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதிரடி ஆட்டக்காரர்கள் டேவிட் மில்லர், ரீஸா ஹென்ட்ரிக்ஸ் ஆகியோரும் உள்ளனர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பந்துவீச்சில் மிரட்ட ரபாடா, பெலுக்வாயோ ஆகிய வீரர்கள் உள்ளனர். முதல் ஆட்டத்தில் தோல்வி அடைந்ததால் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற தென்னாப்பிரிக்கா தீவிர முயற்சி செய்யும். 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள இந்தியா தொடரைக் கைப்பற்ற வேண்டும் என்பதே ரசிர்களின் எதிர்பார்ப்பு. இரவு 7 மணிக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் இந்த ஆட்டம் நேரடி ஒளிபரப்பாகும்.