7-ஆவது உலக சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்பில் மேரி கோம்
By DIN | Published On : 29th September 2019 12:24 AM | Last Updated : 29th September 2019 12:24 AM | அ+அ அ- |

பதக்கம் வெல்வதின் மூலமே என்னை விமர்சனம் செய்வோருக்கு பதில் தர முடியும். திருமணமாகி, குழந்தைகள் பிறந்தவுடன் எனது குத்துச்சண்டை வாழ்க்கை முடிந்து விடும் என கருதினர். ஆனால் அவற்றை முறியடித்தேன்
ரஷியாவின் உலன் உடேவில் வரும் அக். 3-ஆம் தேதி தொடங்கவுள்ள உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் 7-ஆவது பட்டத்தை வெல்லும் முனைப்பில் உள்ளார் நட்சத்திர வீராங்கனை மேரி கோம்.
ஏற்கெனவே 6 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள மேரி கோம், ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளார். இறுதியாக கடந்த 2018-இல் புது தில்லியில் நடைபெற்ற உலகப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். அதன்பின் தீவிர பயிற்சியில் ஈடுபடாமல் இருந்த மேரி, தற்போது ரஷியாவில் நடைபெறும் உலகக் போட்டிக்காக கடும் பயிற்சியில் உள்ளார்.
இதுதொடர்பாக மேரி கோம் கூறியதாவது:
இந்த போட்டி எனக்கு மிகவும் முக்கியமானதாகும். குறிப்பாக 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் எனது பிரிவு 48 கிலோவில் இருந்து 51 கிலோவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் தான் பெரும்பாலான வீராங்கனைகள் போட்டியிடுவர் என்பதால் கடும் சவால் காத்துள்ளது.
இந்த உலகப் போட்டியில் எதிராளிகள் குறித்து அறிந்து கொள்ள முடியும். இதில் பதக்கம் வெல்வதின் மூலமே என்னை விமர்சனம் செய்வோருக்கு பதில் தர முடியும். திருமணமாகி, குழந்தைகள் பிறந்தவுடன் எனது குத்துச்சண்டை வாழ்க்கை முடிந்து விடும் என கருதினர். ஆனால் அவற்றை முறியடித்தேன்.
ரஷிய உலகப் போட்டி, ஒலிம்பிக் தகுதிச் சுற்றாகும். இதில் தங்கம், வெள்ளி வெல்வோர் நேரடியாக ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கு தேர்வு பெறலாம்.
முந்தைய 6 பட்டங்களும் 48 கிலோ எடைப்பிரிவில் பெறப்பட்டவை. 51 கிலோ பிரிவு எனக்கு புதிதல்ல. தற்போது என்னை விட பலம் வாய்ந்த வீராங்கனைகளுடன் தான் பயிற்சி மேற்கொண்டேன்.
51 கிலோ பிரிவில் தான் 2014 ஆசியப் போட்டியில் தங்கம், 2018-இல் வெண்கலம் வென்றுள்ளேன் என்றார் மேரி.
10 பேர் அணி: மகளிர் உலக குத்துச்சண்டை போட்டியில் 10 பேர் கொண்ட இந்திய அணி கலந்து கொள்கிறது.
மஞ்சு ராணி 48 கிலோ, மேரி கோம் 51 கிலோ, ஜமுனா போரோ 54 கிலோ, நீரஜ் 57 கிலோ, சரிதா தேவி 60 கிலோ, மஞ்சு போம்ரியா 64 கிலோ, லவ்லினா போரோகைன் 69 கிலோ, சவிட்டி போரா 75 கிலோ, நந்தினி 81 கிலோ, கவிதா சாஹல் பிளஸ் 81 கிலோ.
உலன் உடேவில் அக். 3 முதல் 13-ஆம் தேதி வரை இப்போட்டி நடக்கிறது.