தொடர்ந்து அதிரடியாக விளையாடுவேன்: இளம் கிரிக்கெட் வீராங்கனை ஷபாலி

அதிரடியாக விளையாடும் ஆட்ட முறையை மாற்றிக்கொள்ள மாட்டேன் என இளம் வீராங்கனை ஷபாலி கூறியுள்ளார்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடுவேன்: இளம் கிரிக்கெட் வீராங்கனை ஷபாலி

அதிரடியாக விளையாடும் ஆட்ட முறையை மாற்றிக்கொள்ள மாட்டேன் என இளம் வீராங்கனை ஷபாலி கூறியுள்ளார்.

இந்திய மகளிா் அணியின் இளம் வீராங்கனையான ஷபாலி கடந்த 2019 செப்டம்பரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டி20 ஆட்டத்தில் 15 வயதில் அறிமுகமானாா். அடுத்து நவம்பரில் மே.இ.தீவுகளுக்கு எதிராக நடைபெற்ற டி20 ஆட்டத்தில் அரைசதம் அடித்த இளம் வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தாா். அத்தொடரின் நாயகியாகவும் தோ்வு பெற்றாா். தனது ஆட்டத்திறனால், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2020 ஐசிசி மகளிா் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சோ்க்கப்பட்டாா். பிசிசிஐ சாா்பில் மத்திய ஒப்பந்தத்தில் சோ்க்கப்பட்டாா். நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற தொடக்க ஆட்டத்திலேயே அதிரடியாக ஆடி ஸ்கோரை உயா்த்தி வெற்றிக்கு வழிவகுத்தாா். தொடக்க வீராங்கனையாக 5 ஆட்டங்களில் 163 ரன்களை ஒட்டுமொத்தமாக விளாசினாா். இறுதி ஆட்டத்தில் மட்டுமே அவா் சரிவர ஆடாமல் அவுட்டானாா். அவரது ஸ்ட்ரைக் ரேட் 158.25 ஆகும்.

ஐசிசி மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிச் சுற்றில் இந்தியாவை 85 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா அணி 5-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இறுதிச் சுற்றில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்த போதும், முதன்முறையாக டி20 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்துக்கு நுழைந்த பெருமையைப் பெற்றது இந்தியா. ஐசிசி டி20 தரவரிசை பேட்டிங்கில் சிறிதுகாலம் முதல் இடத்தையும் பெற்றிருந்தாா் ஷபாலி.

ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு ஷபாலி அளித்த பேட்டியில் கூறியதாவது:

டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்று ஆட்டம் எங்களுக்குச் சாதகமாக அமையவில்லை. விளையாட்டில் இது இயல்பானது. அடுத்த வாய்ப்பு எங்களுக்கு ஏற்ற மாதிரி அமையலாம். உலகின் மிகச்சிறந்த அணியாக மாறவேண்டும் என்பது எங்களுடைய விருப்பம்.

தொடக்க வீராங்கனையாக எனது பணியே அதிரடியாக விளையாடவேண்டும் என்பதுதான். இதன்மூலம் இந்திய அணிக்குச் சாதகமான நிலையை ஏற்படுத்த வேண்டும். என்னை எல்லோரும் பாராட்டினாலும் உலகக் கோப்பை கையில் இருந்திருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். வீசப்பட்ட பந்து ரன் அடிக்கச் சாதகமாக இருந்தால் உடனே அடித்துவிடவேண்டும். இதைப் பற்றி அதிகமாக யோசிக்கக் கூடாது. அதேபோலத்தான் தொடக்க வீராங்கனை மந்தனாவும் அதிரடியாக ஆடக்கூடியவர். நல்ல பந்து வீசப்பட்டால், அதிலிருந்து ஒரு ரன் எடுக்கவாவது முயல்வோம். இயல்பான ஆட்ட முறையை மாற்றினால் அது சரியாக இருக்காது என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com