இந்தியாவிடம் டெஸ்ட் தொடரில் தோற்றது மிகப் பெரிய பாடம்: ஆஸி. பயிற்சியாளர்

ஆஸ்திரேலிய அணியின் பலவீனங்களை வெளிப்படுத்தி திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பை அளித்ததாக...
இந்தியாவிடம் டெஸ்ட் தொடரில் தோற்றது மிகப் பெரிய பாடம்: ஆஸி. பயிற்சியாளர்

2018-2019-ல் ஆஸ்திரேலிய மண்ணில் முதல்முறையாக வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் தொடர் வெற்றியை அடைந்தது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி.

இந்தத் தோல்வி, ஆஸ்திரேலிய அணியின் பலவீனங்களை வெளிப்படுத்தியதோடு அதிலிருந்து திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பை அளித்ததாக ஆஸி. அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறியுள்ளார்.

ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

இந்தியாவுக்கு எதிரான தோல்வி பல பாடங்களைக் கற்றுக் கொடுத்தது. ஆஸ்திரேலிய அணியின் பலவீனங்களை வெளிப்படுத்தியதோடு அதிலிருந்து திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பை அளித்தது. இன்னும் 10 வருடங்கள் கழித்துப் பார்க்கும்போது ஒரு பயிற்சியாளராக அதுதான் என் வாழ்க்கையை மாற்றி அமைத்தது என்பேன். 2001-ல் 31 வயதில் ஆஸ்திரேலிய அணியிலிருந்து நீக்கப்பட்டேன். கதை முடிந்தது என நினைத்தேன். ஆனால் அதுதான் ஒரு கிரிக்கெட் வீரராக என்னை மாற்றியமைத்தது. அந்தத் தருணத்தை இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்வியுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.

அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்திலும், பெர்த்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 146 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. மூன்றாவது டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று பார்டர்-கவாஸ்கர் கோப்பையைத் தக்கவைத்துக்கொண்டது. சிட்னியில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் டிரா ஆனது. இதனால் 2-1 என டெஸ்ட் தொடரை வென்ற விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் முதல்முறையாக வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் தொடர் வெற்றியை அடைந்தது. தொடர் நாயகன் விருது புஜாராவுக்குக் கிடைத்தது.

ஆஸ்திரேலியாவில் கடந்த 1980-81, 1985-86, 2003-04 ஆகிய காலகட்டங்களில் நடைபெற்ற தொடரை இந்தியா சமன் செய்துள்ளது. 1967-68, 1977-78, 1991-92, 1999-2000, 2007-08, 2011-12, 2014-15 ஆகிய காலகட்டங்களில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தோல்வி கண்டுள்ளது. 2011 உலகக் கோப்பை வெற்றியை விடவும் உணர்வுபூர்வமானது இந்த டெஸ்ட் தொடர் வெற்றி என்றார் கோலி. இது எனக்கு மிகவும் திருப்திகரமான வெற்றி. உலகக் கோப்பை 1983, உலக சாம்பியன்ஷிப் 1985 வெற்றிகளை விடவும் இது மேலானது என்றார் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com