
கராச்சி: பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மலுக்கு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் மூன்று ஆண்டுகள் தடை விதித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மல். அணி நிர்வாகத்துடனான மோதல் போக்கு காரணமாக அவர் தற்போது அணிக்குத் தேர்வு செய்யப்படவில்லை. அவர் சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘போட்டி ஒன்றில் இரண்டு பந்துகளை விளையாடாமல் தவிர்த்தால் எனக்கு ரூ. 1.50 கோடி பணம் தருவதாக ஒருமுறை சிலர் அணுகினார்கள். அதேபோல் இந்தியாவுக்கு எதிரான தொடரில் இரண்டு போட்டிகளில் விளையாடாமல் இருந்தால் பணம் தருவதாகவும் தெரிவித்தார்கள்’ என்று கூறியிருந்தார்.
அவரது இந்தப் பேச்சு பாகிஸ்தான் கிரிக்கெட் உலகை அதிர்ச்சியடைய வைத்தது. அந்த நாட்டு கிரிக்கெட் வாரிய விதிகளின் படி, இத்தகைய தரகர்கள் வீரர் ஒருவரை அணுகுவது குறித்து முறைப்படி தாமதமின்றி சம்பந்தப்பட்ட வீரர் தகவல் தெரிவிக்காமல் இருப்பது குற்றமாகும். அதற்கு விசாரணை எதுவும் இல்லாமல் வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் நடவடிக்கை எடுக்கலாம்.
அதன்படி உமர் அக்மலுக்கு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் மூன்று ஆண்டுகள் தடை விதித்து, அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவரான ஓய்வு பெற்ற நீதிபதி பைசல் இ மீரான் சவுஹான் உத்தரவிட்டுள்ளதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.