இதே கோலியாக இருந்திருந்தால் அனைவரும் பாராட்டியிருப்பார்கள்: பாபர் அஸாமுக்கு ஆதரவு தெரிவிக்கும் நாசர் ஹூசைன்

கோலி, ஸ்மித் ஆகியோரின் வரிசையில் பாபர் அஸாம் நிறுத்தப்பட வேண்டும்.
இதே கோலியாக இருந்திருந்தால் அனைவரும் பாராட்டியிருப்பார்கள்: பாபர் அஸாமுக்கு ஆதரவு தெரிவிக்கும் நாசர் ஹூசைன்

கோலியைப் பாராட்டும் கிரிக்கெட் உலகம் பாபர் அஸாமைப் பாராட்டுவதில்லை என முன்னாள் வீரர் நாசர் ஹூசைன் கூறியுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என வென்ற இங்கிலாந்து அணி அடுத்ததாக பாகிஸ்தானுடன் 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. மான்செஸ்டரில் முதல் டெஸ்ட் தொடங்கியுள்ளது.

கடந்த இரு இங்கிலாந்துச் சுற்றுப்பயணங்களிலும் ஆறு டெஸ்டுகளில் விளையாடிய பாகிஸ்தான் அணி 3 டெஸ்டுகளில் வெற்றி பெற்று 3 டெஸ்டுகளில் தோல்வியடைந்துள்ளது. இதனால் இந்த டெஸ்ட் தொடர் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து - பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் நோ பால் குறித்த முடிவுகளைகளை 3-ம் நடுவர் கவனிக்கவுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய விருப்பம் தெரிவித்தது. இரு சுழற்பந்துவீச்சாளர்கள், 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியுள்ளது பாகிஸ்தான் அணி. பென் ஸ்டோக்ஸ் 100% உடற்தகுதியில் இல்லாமல் போனாலும் இந்த டெஸ்டில் விளையாடுவதாக ஜோ ரூட் கூறியுள்ளார். 

முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்துள்ளது. மழை காரணமாக 49 ஓவர்கள் மட்டுமே வீச முடிந்தது. பாபர் அஸாம் 69, ஷான் மசூத் 46 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

பாபர் அஸாம் மட்டும் கோலியாக இருந்திருந்தால் அனைவரும் பாராட்டித் தள்ளியிருப்பார்கள் என்று இங்கிலாந்து முன்னாள் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான நாசர் ஹூசைன் கூறியுள்ளார்.

முதல் நாள் ஆட்டத்தில் பாபர் அஸாம் சிறப்பாக விளையாடியதைப் பாராட்டிய இங்கிலாந்து முன்னாள் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான நாசர் ஹுசைன் கூறியதாவது:

கோலி, ஸ்மித் ஆகியோரின் வரிசையில் பாபர் அஸாம் நிறுத்தப்பட வேண்டும். நிலைமை அப்படியில்லை என்பது அவமானத்துக்கு உரியது. பாகிஸ்தான் அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் காலி மைதானத்தில் விளையாடுவதாலும் இந்தியாவுக்கு எதிராக விளையாடாததாலும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்காததாலும் ஏற்பட்ட விளைவுகள் இவை. 

இவர் மட்டும் கோலியாக இருந்திருந்தால் அனைவரும் பாராட்டியிருப்பார்கள். ஆனால் பாபர் அஸாமாக இருப்பதால் யாரும் அவரைப் பற்றி பேசுவதில்லை. 2018-லிருந்து அவருடைய பேட்டிங் சராசரி - 68. வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அவருடைய சராசரி - 55. இளமையான வீரராக உள்ள பாபர் அஸாம் அற்புதமாக விளையாடி வருகிறார். நான்கு திறமையான வீரர்களைப் பற்றி எப்போதும் பேசுகிறார்கள். ஆனால், பாபர் அஸாமையும் சேர்த்தால் ஐந்து திறமையான வீரர்கள் தற்போது உள்ளார்கள் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com