
2011-ல் தோனியை கேப்டன் பதவியிலிருந்து நீக்க தேர்வுக்குழுவினர் முடிவெடுத்ததாக பிசிசிஐயின் முன்னாள் தலைவர் என். சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகக் கடந்த சனிக்கிழமையன்று அறிவித்தார்.
இந்நிலையில் 2011-ல் தோனியை கேப்டன் பதவியிலிருந்து நீக்க தேர்வுகுழுவினர் முடிவெடுத்ததாக ஒரு பேட்டியில் முன்னாள் தலைவர் என். சீனிவாசன் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:
இது 2011-ல் நடந்தது. இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது. ஆனால் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரில் நன்றாக விளையாடவில்லை. எனவே தேர்வுக்குழுவினரில் ஒருவர், தோனியை ஒரு நாள் கேப்டன் பதவியிலிருந்து நீக்க முடிவெடுத்தார். தோனியை எப்படி கேப்டன் பதவியிலிருந்து நீக்க முடியும்? சில மாதங்களுக்கு முன்பு தான் உலகக் கோப்பையை வென்றிருந்தார். தோனிக்குப் பதிலாக யாரை கேப்டனாக்குவது என்று கூட தேர்வுக்குழுவினர் யோசிக்கவில்லை. இதுபற்றிய விவாதம் நடைபெற்றது. தேர்வுக்குழுவினரின் கூட்டம் நடைபெறுவதற்கு முன்பு, தோனியை அணியில் வீரராக மட்டுமே தேர்வு செய்ய முடியாது என்றேன்.
அன்று விடுமுறை தினம். நான் கோல்ப் விளையாடிக் கொண்டிருந்தேன். பிசிசிஐ செயலாளராக இருந்த சஞ்சய் ஜக்தேல் என்னிடம் கூறினார், தோனியை கேப்டனாகத் தேர்வு செய்ய தேர்வுக்குழுவினர் மறுக்கிறார்கள். அணியில் மட்டும் தேர்வு செய்வார்களாம் என்றார். தோனி தான் கேப்டன் என நான் முடிவெடுத்தேன். என்னுடைய அதிகாரங்களை அதற்காகப் பயன்படுத்தினேன் என்றார்.
2012-ல் இந்த விவகாரம் பற்றி தேர்வுக்குழுவில் இருந்த மொஹிந்தர் அமர்நாத் பேசியுள்ளார். தோனியை கேப்டன் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்கிற தேர்வுக்குழுவினரின் முடிவை சீனிவாசன் ஏற்கவில்லை என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.