3-வது டெஸ்ட்: தொடரை வெல்லுமா இங்கிலாந்து அணி?

3-வது டெஸ்டிலும் ஸ்டோக்ஸ் இல்லாமல் விளையாட வேண்டிய நிலைமையில் இங்கிலாந்து உள்ளது.
3-வது டெஸ்ட்: தொடரை வெல்லுமா இங்கிலாந்து அணி?

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் செளதாம்ப்டனில் நாளை முதல் தொடங்குகிறது

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என வென்றது இங்கிலாந்து அணி. அடுத்ததாக பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து அணி. 2-வது டெஸ்ட் டிரா ஆனது. 

இந்த டெஸ்ட் பற்றி இங்கிலாந்து வீரர் போப் கூறியதாவது: 3-வது டெஸ்ட் தான் இந்த வருடம் நாங்கள் விளையாடவுள்ள கடைசி டெஸ்ட். எனவே இந்த டெஸ்டை வெல்ல கூடுதல் ஆர்வத்துடன் உள்ளோம். 2-வது டெஸ்டில் மழையால் நிறைய விளையாட முடியாமல் போனது என்றார்.

சொந்தக் காரணங்களுக்காக நியூசிலாந்து செல்ல வேண்டியிருப்பதால் கடைசி இரு டெஸ்டுகளில் இருந்து ஸ்டோக்ஸ் விலகியுள்ளார். இதனால் 3-வது டெஸ்டிலும் ஸ்டோக்ஸ் இல்லாமல் விளையாட வேண்டிய நிலைமையில் இங்கிலாந்து உள்ளது.

2-வது டெஸ்ட் ஆட்டம் மழையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மாலை வேளையில் மழை பெய்யாத போதிலும் வெளிச்சமின்மை காரணமாக ஆட்டத்தைத் தொடர முடியாத நிலை ஏற்படுகிறது. இதற்கு ஒரு தீர்வை கூறியுள்ளார் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான். அவர் கூறியதாவது: வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் தடைபடுவது கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல. இதற்குத் தீர்வு - இளஞ்சிவப்புப் பந்தை எல்லா நேரமும் பயன்படுத்துவதுதான், முக்கியமாக இங்கிலாந்தில். கிரிக்கெட் ஒளிரப்புக்காக ஐசிசிக்குப் பெரிய தொகை அளிப்பவர்கள் இதுகுறித்து புகார் அளிக்கவேண்டும். இதற்கு ஒரு தீர்வு கண்டுபிடிக்கப்பட வேண்டும். வெளிச்சம் இல்லாதபோதும் ஆட்டம் தொடர வேண்டும் என்றார்.

இதற்கு ஒரு சிறிய தீர்வு எட்டப்பட்டுள்ளது. மழையாலோ வேறு காரணங்களாலோ முந்தைய நாள் முழு நாள் ஆட்டம் நடைபெறாமல் போனால் அடுத்த நாள் ஆட்டத்தை காலை 10.30 மணிக்குத் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2-வது டெஸ்டில் மொத்தமாகவே 143.3 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டதால் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் 2010-க்குப் பிறகு டெஸ்ட் தொடரில் தோற்றதில்லை. கடந்த இரு இங்கிலாந்துச் சுற்றுப்பயணங்களிலும் ஆறு டெஸ்டுகளில் விளையாடிய பாகிஸ்தான் அணி 3 டெஸ்டுகளில் வெற்றி பெற்று 3 டெஸ்டுகளில் தோல்வியடைந்துள்ளது. இதனால் கடைசி டெஸ்ட் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3-வது டெஸ்டை வென்றதன் மூலம் விஸ்டன் கோப்பையைக் கைப்பற்றிய இங்கிலாந்து அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேறியது. இந்த டெஸ்ட் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பு 146 புள்ளிகளுடன் 4-ம் இடத்தில் இருந்தது. ஆனால் இரு டெஸ்டுகளில் வெற்றி பெற்று 80 புள்ளிகளைச் சேர்த்துக்கொண்டது. இதனால் 226 புள்ளிகளுடன் இந்தியா (360), ஆஸ்திரேலியா (296) ஆகிய அணிகளுக்கு அடுத்ததாக 3-ம் இடத்தைப் பிடித்தது. பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் வெற்றி பெற்று, 2-வது டெஸ்ட் டிரா செய்ததன் மூலம் தற்போது 279 புள்ளிகளுடன் தொடர்ந்து 3-வது இடத்தில் இங்கிலாந்து அணி உள்ளது. இன்னொரு டெஸ்டில் வெற்றி பெற்றால் ஆஸ்திரேலிய அணியைப் பின்னுக்குத் தள்ளி 2-ம் இடத்தை இங்கிலாந்து அணி பிடித்துவிடும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com