டி20 கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர்: பிராவோ சாதனை

டி20 கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர்: பிராவோ சாதனை

டி20 கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் என்கிற சாதனையை மேற்கிந்தியத் தீவுகள் வீரர் டுவைன் பிராவோ படைத்துள்ளார்.



டி20 கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் என்கிற சாதனையை மேற்கிந்தியத் தீவுகள் வீரர் டுவைன் பிராவோ படைத்துள்ளார்.

தனது 459-வது டி20 ஆட்டத்தில் இந்த இலக்கை எட்டியுள்ளார். சிபிஎல் போட்டியில் டிரின்பேகோ அணியில் இடம்பெற்றுள்ள பிராவோ, தனது 500-வது விக்கெட்டாக கார்ன்வாலை வீழ்த்தினார். மேலும் தனது 100-வது சிபிஎல் ஆட்டத்தில் இந்தச் சாதனையை எட்டியுள்ளார். 100 சிபிஎல் ஆட்டத்தில் இடம்பெற்ற முதல் வீரர் என்கிற மற்றொரு சாதனையையும் இதன்மூலம் நிகழ்த்தியுள்ளார். 

இதற்கு முன்பு டி20 ஆட்டத்தில் முதல் 300, 400 விக்கெட்டுகளை எடுத்த வீரரும் பிராவோ தான். 

14 வருடங்களாக டி20 ஆட்டத்தில் விளையாடி வரும் பிராவோ, மேற்கிந்தியத் தீவுகள் உள்பட 23 அணிகளில் இடம்பெற்றுள்ளார். ஐபிஎல் போட்டியில் 147 விக்கெட்டுகள் எடுத்துள்ள பிராவோ, 2013, 2015 ஆண்டுகளில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தினார். டி20 ஆட்டங்களில் பெரும்பாலும் கடைசி 5 ஓவர்களில் தான் அதிகம் பந்துவீசியுள்ளார் பிராவோ. அதில் 283 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

டி20 ஆட்டம்: அதிக விக்கெட்டுகள்

பிராவோ - 501 விக்கெட்டுகள்
மலிங்கா - 390 விக்கெட்டுகள்
சுனில் நரைன் - 383 விக்கெட்டுகள்
இம்ரான் தாஹிர் - 374 விக்கெட்டுகள்

டி20: பிராவோவால் அதிக முறை விக்கெட்டுகளைப் பறிகொடுத்தவர்கள்

பொலார்ட் - 9
சமி - 8
டேவிட் வீஸ் - 8
கெய்ல் - 7

அக்டோபர் 2018-ல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் பிராவோ. எனினும் கடந்த டிசம்பர் மாதம் தன்னுடைய ஓய்வு அறிவிப்பை வாபஸ் பெற்றார். இதையடுத்து அயர்லாந்து, இலங்கை அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களில் விளையாடினார். கடைசி ஓவர்களில் அணியின் பந்துவீச்சைப் பலப்படுத்துவதற்காக பிராவோ சேர்க்கப்பட்டுள்ளார் என்று மே.இ. தீவுகள் அணியின் தேர்வுக்குழு உறுப்பினர் ரோஜர் ஹார்பர் கூறினார். இதையடுத்து டி20 உலகக் கோப்பையில் பிராவோ விளையாடுவார் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 2012, 2016 ஆகிய ஆண்டுகளில் மே.இ. தீவுகள் அணி உலகக் கோப்பையை வென்றபோது பிராவோவும் அந்த அணியில் இடம்பெற்றார்.

2004-ல் அறிமுகமான பிராவோ இதுவரை 40 டெஸ்டுகள், 164 ஒருநாள், 71 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com