சென்னையில் பயிற்சி முகாமை நடத்தத் தயங்கினோம்: சிஎஸ்கே காசி விஸ்வநாதன்

சென்னையில் 5 நாள்கள் பயிற்சி முகாமை நடத்துவதால் பயன் உண்டா என தோனியிடம் கேட்டேன்...
சென்னையில் பயிற்சி முகாமை நடத்தத் தயங்கினோம்: சிஎஸ்கே காசி விஸ்வநாதன்

துபை செல்வதற்கு முன்பு சென்னையில் பயிற்சி முகாமை நடத்தத் தயங்கினோம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

கரோனா பரவல் காரணமாக நிகழாண்டு இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டி தள்ளிவைக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பா் 19-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டி, நவம்பா் 10-ம் தேதி முடிவடைகிறது. துபை, அபுதாபி, ஷாா்ஜாவில் உள்ள மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

ஐபிஎல் போட்டியில் விளையாடவுள்ள அனைத்து அணி வீரர்களும் துபை மற்றும் அபுதாபிக்குச் சென்று சேர்ந்துள்ளார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைத் தவிர இதர அணிகள் அனைத்தும் இன்று மற்றும் நாளை முதல் தங்கள் பயிற்சியை ஆரம்பிக்கவுள்ளன. 

துபைக்கு ஆகஸ்ட் 21 அன்று வந்த சிஎஸ்கே அணி, தங்கள் தனிமைப்படுத்துதல் காலத்தைத் திடீரென நீட்டித்துள்ளது. இன்று முதல் பயிற்சியை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், செப்டம்பர் 1 முதல் பயிற்சியை ஆரம்பிக்க சிஎஸ்கே அணி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. 

துபை நட்சத்திர விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சிஎஸ்கே வீரர்களில் வேகப்பந்து வீச்சாளர் ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் துபையில் உள்ள சிஎஸ்கே உறுப்பினர்கள் 12 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் மேலும் சில நாள்களுக்கு சிஎஸ்கே வீரர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அறியப்படுகிறது.

சிஎஸ்கேவைச் சேர்ந்தவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது பற்றிய அதிகாரபூர்வத் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் துபை செல்வதற்கு முன்பு சென்னையில் பயிற்சி முகாமை நடத்தத் தயங்கினோம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். யூடியூப் பேட்டியில் அவர் கூறியதாவது:

சென்னையில் பயிற்சி முகாமை நடத்தினால் பாதுகாப்பு வளையத்தை உருவாக்க வேண்டும். இதனால் முதலில் நாங்கள் தயங்கினோம். துபை செல்வதற்கு முன்பு சென்னையில் 5 நாள்கள் பயிற்சி முகாமை நடத்துவதால் பயன் உண்டா என தோனியிடம் கேட்டேன். ஆனால் தன்னுடைய முடிவில் அவர் உறுதியாக இருந்தார்.

இல்லை சார். கடந்த நான்கைந்து மாதங்களாக யாரும் கிரிக்கெட் விளையாடவில்லை. எல்லோரும் ஒன்று சேர வேண்டும். சென்னையில் பாதுகாப்பு வளையத்தில் இருந்துகொண்டு பயிற்சி மேற்கொண்டால் தான் அதுபற்றி தெரியவரும். துபைக்குச் செல்லும்போது இந்த அனுபவம் உதவியாக இருக்கும். மேலும் உடற்தகுதியை மீட்டெடுக்க இது உதவும் என்று என்னிடம் தோனி விளக்கம் அளித்தார். எங்களுக்கு முதலில் தயக்கம் இருந்தாலும் பயிற்சி முகாம் மிகவும் உதவியாக இருந்தது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com