ஒருவருக்கும் கரோனா இல்லை: அபுதாபியில் பயிற்சியைத் தொடங்கியுள்ள மும்பை, கொல்கத்தா அணிகள்

அனைத்து வீரர்களுக்கும் கரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால்...
ஒருவருக்கும் கரோனா இல்லை: அபுதாபியில் பயிற்சியைத் தொடங்கியுள்ள மும்பை, கொல்கத்தா அணிகள்

அனைத்து வீரர்களுக்கும் கரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் மும்பை, கொல்கத்தா அணிகள் அபுதாபியில் பயிற்சியைத் தொடங்கியுள்ளன. 

கரோனா பரவல் காரணமாக நிகழாண்டு இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டி தள்ளிவைக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பா் 19-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டி, நவம்பா் 10-ம் தேதி முடிவடைகிறது. துபை, அபுதாபி, ஷாா்ஜாவில் உள்ள மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

துபை வந்துள்ள அணிகளில் சிஎஸ்கே தவிர இதர அணிகள் தங்கள் பயிற்சியைத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் அபுதாபிக்கு வந்துள்ள மும்பை, கொல்கத்தா அணிகளின் வீரர்களும் பயிற்சியைத் தொடங்கியுள்ளார்கள். இதுபற்றி அபுதாபி கிரிக்கெட்டின் தலைமைச் செயல் அதிகாரி மேத்யூ பெளச்சர் கூறியதாவது:

இந்தியாவிலிருந்து கிளம்பும் முன்பு அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அபுதாபிக்கு வந்த பிறகு மீண்டும் பரிசோதனை நடத்தப்பட்டது. பிறகு 3-வது மற்றும் 6-வது நாள்களில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அனைத்து வீரர்களுக்கும் கரோனா இல்லை என உறுதியாகியுள்ளது. இதையடுத்து பயிற்சியைத் தொடங்க அரசிடம் அனுமதி கோரப்பட்டது. இன்று எங்களுக்கு அனுமதி கிடைத்துவிட்டது. எனவே பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றார். 

துபைக்கு ஆகஸ்ட் 21 அன்று வந்த சிஎஸ்கே அணி, தங்கள் தனிமைப்படுத்துதல் காலத்தைத் திடீரென நீட்டித்துள்ளது. நேற்று முதல் பயிற்சியை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், செப்டம்பர் 1 முதல் பயிற்சியை ஆரம்பிக்க சிஎஸ்கே அணி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. 

துபை நட்சத்திர விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சிஎஸ்கே வீரர்களில் இருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் துபையில் உள்ள சிஎஸ்கே உறுப்பினர்கள் 12 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் மேலும் சில நாள்களுக்கு சிஎஸ்கே வீரர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அறியப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com