29 வயதில் நியூசிலாந்துக்காக விளையாடுவதிலிருந்து ஓய்வு: அமெரிக்காவுக்கு இடம்பெயரும் கோரி ஆண்டர்சன்

அமெரிக்க அணிக்காக, சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடவும் அவர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
படம் - twitter.com/coreyanderson78
படம் - twitter.com/coreyanderson78
Published on
Updated on
1 min read

36 பந்துகளில் சதமடித்து உலக சாதனை நிகழ்த்தியவர் கோரி ஆண்டர்சன். இந்நிலையில் நியூசிலாந்துக்காகச் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

2014 புத்தாண்டன்று, குயின்ஸ்டவுனில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் 36 பந்துகளில் சதமடித்து உலக சாதனை நிகழ்த்தினார் நியூசிலாந்தின் கோரி ஆண்டர்சன். இதுவரை 13 டெஸ்டுகள், 49 ஒருநாள், 31 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஐபிஎல் போட்டியில் மும்பை, டெல்லி அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார். எனினும் 2018 நவம்பருக்குப் பிறகு நியூசிலாந்து அணியில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை.

இந்நிலையில் அமெரிக்காவில் நடைபெறவுள்ள எம்எல்சி டி20 போட்டியில் பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளார் ஆண்டர்சன். மூன்று வருட ஒப்பந்தத்துக்குச் சம்மதம் தெரிவித்துள்ளதால் 29 வயதிலேயே நியூசிலாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மேலும் வருங்காலத்தில் அமெரிக்க அணிக்காக, சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடவும் அவர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதுபற்றி ஆண்டர்சன் கூறியதாவது:

இது எளிதாக எடுத்த முடிவல்ல. நான் திருமணம் செய்யப் போகிற மேரி மார்கரெட், அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர். என் முடிவில் அவருக்கு அதிகப் பங்கு உள்ளது. எனக்காக அவர் நியூசிலாந்துக்கு வந்து புதிய கலாசாரத்தில் வாழ்ந்து நிறைய தியாகம் செய்துள்ளார். அணியில் விளையாடாதபோதும் காயத்தால் அவதிப்பட்டபோதும் எனக்கு உறுதுணையாக இருந்துள்ளார். எனவே புதிய வாய்ப்பு வருகிறபோது, அமெரிக்காவில் வாழ்வது சரியாக முடிவாகப் பட்டது. கிரிக்கெட்டுக்காக மட்டுமில்லாமல் எங்கள் இருவருக்கும் இது சரியான முடிவாக இருக்கிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com