மெல்போர்ன் டெஸ்ட்: டீன் ஜோன்ஸுக்கு அஞ்சலி செலுத்திய குடும்பத்தினர் (விடியோ)

இந்தக் காட்சியைக் கண்ட ரசிகர்கள் நெகிழ்ந்து போய் ஜோன்ஸின் சாதனைகளுக்கு...
மெல்போர்ன் டெஸ்ட்: டீன் ஜோன்ஸுக்கு அஞ்சலி செலுத்திய குடும்பத்தினர் (விடியோ)

சமீபத்தில் மறைந்த ஆஸி. கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸுக்கு மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. 

2-வது டெஸ்ட் மெல்போர்னில் இன்று தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பெயின், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஆஸ்திரேலியாவை முதல் இன்னிங்ஸில் 195 ரன்களுக்குச் சுருட்டிய இந்திய அணி, முதல் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் மறைந்த ஆஸி. கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸுக்கு மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. 

ஆஸ்திரேலியாவை சோ்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரும், வா்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் (59) மாரடைப்பால் கடந்த செப்டம்பர் மாதம் மரணமடைந்தாா்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை வா்ணனை செய்யும் ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் தொலைக்காட்சியின் வா்ணனையாளா் குழுவில் இடம்பெற்றிருந்த டீன் ஜோன்ஸ், மும்பையில் இருந்தபடி வா்ணனை செய்து வந்தாா். கடந்த செப்டம்பர் 24 அன்று, அவா் மும்பையில் உள்ள ஹோட்டல் அறைக்கு வெளியே நின்று கொண்டிருந்தபோது, திடீரென சுருண்டு விழுந்துள்ளாா். இதையடுத்து, அவா் அருகே நின்றிருந்த மற்றொரு ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரரும், வா்ணனையாளருமான பிரெட் லீ முதலுதவி அளித்துள்ளாா். அதன்பிறகு டீன் ஜோன்ஸை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாக அறிவித்தனா்.

ஆஸ்திரேலிய அணிக்காக 52 டெஸ்டுகள், 164 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடிப் பிரபலம் அடைந்தவர் டீன் ஜோன்ஸ். டெஸ்டில் 11 சதங்களும் ஒருநாள் கிரிக்கெட்டில் 7 சதங்களும் அடித்துள்ளார்.

மெல்போர்ன் பாக்ஸிங் டே டெஸ்டில் டீன் ஜோன்ஸுக்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. ஜோன்ஸின் டெஸ்ட் எண் 324 மற்றும் அவருடைய அதிகபட்ச முதல்தர ரன்கள் 324 என்பதால் தேநீர் இடைவேளையின்போது மதியம் 3.24 மணிக்கு அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 

ஜோன்ஸின் மனைவியும் மகள்களும் முன்னாள் கேப்டன் ஆலன் பார்டருடன் இணைந்து மைதானத்துக்குள் வந்தார்கள். ஜோன்ஸின் பேட், கூலிங் கிளாஸ் மற்றும் தொப்பியை ஸ்டம்புக்கு அருகே வைத்து மரியாதை செலுத்தினார்கள். இந்தக் காட்சியைக் கண்ட ரசிகர்கள் நெகிழ்ந்து போய் ஜோன்ஸின் சாதனைகளுக்கு கைத்தட்டி மரியாதை செலுத்தினார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com