ஆஸி. கேப்டனுக்கு ரன் அவுட் கொடுக்காத 3-ம் நடுவர்: ரசிகர்கள் அதிருப்தி!

டிம் பெயின் தப்பித்தது ஆச்சர்யமாக உள்ளது. கோட்டைத் தாண்டி பேட் இல்லை...
ஆஸி. கேப்டனுக்கு ரன் அவுட் கொடுக்காத 3-ம் நடுவர்: ரசிகர்கள் அதிருப்தி!

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயினுக்கு மூன்றாம் நடுவர் ரன் அவுட் கொடுக்காததால் ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளார்கள்.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. 

2-வது டெஸ்ட் மெல்போர்னில் இன்று தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பெயின், பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

ஜோ பர்ன்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஸ்மித்தும் அதேபோல ரன் எதுவும் எடுக்காமல் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்ததால் நெருக்கடியில் இருந்தது ஆஸ்திரேலிய அணி. மேத்யூ வேட் 30 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். டிராவிஸ் ஹெட்டை 38 ரன்களில் வீழ்த்தினார் பும்ரா. அறிமுக வீரர் சிராஜ், லபுசானேவை 48 ரன்களில் வீழ்த்தி அசத்தினார். இதனால் முதல் ஐந்து விக்கெட்டுகளை 134 ரன்களுக்குள் இழந்தது ஆஸ்திரேலிய அணி.

தேநீர் இடைவேளையின்போது ஆஸ்திரேலிய அணி, 52 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அஸ்வின், பும்ரா தலா 2 விக்கெட்டுகளும் அறிமுக வீரர் சிராஜ் ஒரு விக்கெட்டும் எடுத்தார்கள்.

இந்நிலையில் 55-வது ஓவரின் கடைசிப் பந்தை ஆஸி. பேட்ஸ்மேன் கிரீன் எதிர்கொண்டார். அப்போது ரன் எடுக்க முயன்றபோது உமேஷ் யாதவ், விக்கெட் கீப்பரிடம் த்ரோ வீசினார். மறுமுனையில் இருந்து ஓடிவந்த பெயின், நூலிழையில் ரன்னைப் பூர்த்தி செய்தது போலத் தெரிந்தது. ஆனால் ரீபிளேயில் பெயினின் பேட், கிரீஸின் கோட்டில் இருந்தது. இதனால் 3-ம் நடுவர் பால் வில்சன் அவுட் கொடுப்பார் என இந்திய அணியினரும் ரசிகர்களும் எதிர்பார்த்தார்கள். ஆனால் எதிர்பாராத விதமாக நாட் அவுட் என அறிவித்தார் 3-ம் நடுவர். 

பெயில்ஸை ரிஷப் பந்த் நீக்கும்போது பெயினின் பேட், கோட்டைத் தாண்டவில்லை. கோட்டின் முனையில் இருந்தது. ஆனால், வேறொரு கோணத்தில் பெயினின் பேட், கோட்டைத் தாண்டிவிட்டதாகவும் அதனால் அவுட் இல்லை என்றும் முடிவெடுத்தார் 3-ம் நடுவர் பால் வில்சன்.

நடுவரின் இந்த முடிவு இந்திய அணியினருக்கும் ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தைத் தந்தது. கேப்டன் ரஹானே, கள நடுவரிடம் இதுபற்றி விவாதித்தார். சமூகவலைத்தளங்களிலும் ரசிகர்கள் தங்கள் கோபத்தையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தினார்கள்.

பிரபல கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான ஷேன் வார்னே, இதுபற்றி கூறியதாவது: அந்த ரன் அவுட் மேல்முறையீட்டில் இருந்து டிம் பெயின் தப்பித்தது ஆச்சர்யமாக உள்ளது. கோட்டைத் தாண்டி பேட் இல்லை என நினைக்கிறேன். அவுட் என அறிவித்திருக்க வேண்டும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com