ஜிம்முக்குச் சென்றது கிடையாது: ‘இந்திய உசைன் போல்ட்’ சீனிவாச கெளடாவின் சிக்ஸ் பேக் உடற்கட்டுக்கான ரகசியம் என்ன?

சிறிய வயதிலிருந்து எனக்கு வலுவான உடற்கட்டு இருந்ததால்  கம்பளா விளையாட்டில் நான் ஈடுபடவேண்டும் என.. 
ஜிம்முக்குச் சென்றது கிடையாது: ‘இந்திய உசைன் போல்ட்’ சீனிவாச கெளடாவின் சிக்ஸ் பேக் உடற்கட்டுக்கான ரகசியம் என்ன?

கர்நாடகாவின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான கம்பளா போட்டியில் 142.50 மீ. தூரத்தை 13.62 விநாடிகளில் கடந்து நாடு முழுக்கப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் சீனிவாச கெளடா.

எருமை ஓட்டப் பந்தயப் போட்டி, கர்நாடகாவில் நவம்பர் முதல் மார்ச் வரை பல்வேறு பகுதிகளில் நடைபெறும். சேறு நிரம்பியிருக்கும் வயல் பகுதிகளில் எருமைகளை வண்டிகளில் பூட்டி, அதன்பின்னே விவசாயிகளும் ஓடுவார்கள். இந்நிலையில், கர்நாடகாவில் சமீபத்தில் நடைபெற்ற கம்பளா போட்டியில் 142.50 மீ. தூரத்தை 13.62 விநாடிகளில் கடந்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார் 28 வயது சீனிவாச கெளடா.

பிரபல ஓட்டப் பந்தய வீரர் உசைன் போல்ட், 100 மீ. ஓட்டத்தை 9.58 விநாடிகளில் ஓடி உலக சாதனை செய்துள்ளார். இதன்மூலம் உசைன் போல்ட்டை விடவும் வேகமாக சீனிவாச கெளடா ஓடியுள்ளதாக (100 மீ. ஓட்டத்தை 9.55 விநாடிகளில் கடந்துள்ளார்) கர்நாடக விளையாட்டு ரசிகர்கள் பரவசம் அடைந்துள்ளார்கள்.

தக்‌ஷினா கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்த கெளடா, கடந்த ஏழு வருடங்களாக கம்பளா போட்டியில் பங்கேற்று வருகிறார். என்னை உசைன் போல்டுடன் ஒப்பிடுகிறார்கள். அவர் உலக சாம்பியன். நான் வயல்வெளிகளில் ஓடுபவன் எனப் பேட்டியளித்துள்ளார் கெளடா. 

உசைன் போல்ட்டுடன் ஒப்பிட்டு கெளடாவின் சாதனைகள் ஊடகங்கள் வெளியானதையடுத்து, மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை இணையமைச்சா் கிரண் ரிஜிஜு, அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார். சாய் விளையாட்டு அமைப்பின் பயிற்சியாளர்களைக் கொண்டு கெளடாவின் திறமையைப் பரிசோதனை செய்து பயிற்சி அளிக்கவுள்ளோம். இந்தியாவின் எந்தவொரு திறமையும் வீணாக விடமாட்டோம் என்று அவர் கூறியுள்ளார்.

வேகமான ஓட்டம் மட்டுமல்லாமல் ஒரு தடகள வீரருக்கான உடற்கட்டும் கெளடாவுக்கு அமைந்துள்ளதையும் பலரும் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளார்கள். தனது வலுவான சிக்ஸ் பேக் பாணியிலான உடற்கட்டின் ரகசியம் குறித்து கெளடா பேட்டியளித்ததாவது:

சிறிய வயதிலிருந்து எனக்கு வலுவான உடற்கட்டு இருந்ததால்  கம்பளா விளையாட்டில் நான் ஈடுபடவேண்டும் என அக்கம்பக்கத்தினர் கூறினார்கள். அப்படித்தான் நான்  கம்பளா அகாடமியில் சேர்ந்து, இந்த விளையாட்டில் ஈடுபடுவது குறித்துக் கற்றுக்கொண்டேன். 12 நிகழ்ச்சிகளில் நடைபெற்ற 35 பந்தயங்களை நான் வென்றுள்ளேன். விடியோ, புகைப்படங்கள் பார்த்து என்னுடைய சிக்ஸ் பேக் உடற்கட்டுக்கான ரகசியம் குறித்துக் கேட்கிறீர்கள். நான் ஜிம்முக்குச் சென்றது கிடையாது. காலையில் கஞ்சி குடிப்பேன். மதியம் மீனும் இரவு உணவுக்கு சிக்கனும் சாப்பிடுவேன். மீன் கட்டாயம் உணவில் இருக்கவேண்டும். நான் வலுவாகவும் நல்ல உடற்கட்டுடனும் இருப்பதற்குக் காரணம் மீன் தான் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com