
முதல் 4 ஓவர்களில் 40 ரன்கள் எடுத்தது இந்திய மகளிர் அணி. மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு இதைவிடவும் ஒரு நல்ல தொடக்கம் கிடைக்குமா?
அதன்பிறகு இந்தத் தொடக்கத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாமல் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்துள்ளது இந்திய மகளிர் அணி.
சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சாா்பில் இன்று தொடங்கியுள்ள மகளிா் டி20 உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை எதிா்கொள்கிறது இந்திய அணி. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று 5-வது பட்டத்தைக் கைப்பற்ற ஆர்வமாக உள்ளது. இந்தியா 2009, 2010, 2018-ல் அரையிறுதி வரை தகுதி பெற்றது. அதே நேரம் இளம் வீராங்கனைகளைக் கொண்ட இந்திய அணி முதல் முறையாகப் பட்டம் வெல்லும் முனைப்போடு உள்ளது. உலகக் கோப்பையில் மொத்தம் 10 அணிகள் இடம் பெற்றுள்ளன.
சிட்னியில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதல் ஓவரில் மட்டும் நிதானமாக விளையாடிய இந்திய அணி 4 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்து அசத்தியது. அதன்பிறகு இந்திய அணி தடுமாற ஆரம்பித்ததுதான் சோகம்.
மந்தனா, 10 ரன்களில் ஆட்டமிழந்தார். 16 வயது ஷஃபாலி வர்மா அடுத்த ஓவரில் 29 ரன்களுடன் வெளியேறினார். இதுபோதாது என்று அடுத்த ஓவரில் கெளர் 2 ரன்களில் ஆட்டமிழக்க, நிலைமை மாறிப்போனது. 10 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் எடுத்தது இந்தியா. அடுத்த ஆறு ஓவர்களில் இந்திய அணி ஒரு பவுண்டரி மட்டும் அடித்தது. இதனால் இந்திய அணி எப்படியும் 150 ரன்களாவது தாண்டும் என்கிற எதிர்பார்ப்பு வீணானது. ரோட்ரிகஸ் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி 10 ஓவர்களில் இந்திய அணி மொத்தமாக 3 பவுண்டரிகள் மட்டுமே அடித்ததால் பெரிய ஸ்கோரை அடிக்க முடியாமல் போனது. தீப்தி சர்மா, 46 பந்துகளில் 49 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.