இதுதான் இந்திய இன்னிங்ஸின் திருப்புமுனை: சௌதி

இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் ரிஷப் பந்த்தின் ரன் அவுட்தான் திருப்புமுனையாக அமைந்தது என நியூஸிலாந்து வேகப்பந்துவீச்சாளர் டிம் சௌதி தெரிவித்துள்ளார்.
இதுதான் இந்திய இன்னிங்ஸின் திருப்புமுனை: சௌதி


இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் ரிஷப் பந்த்தின் ரன் அவுட்தான் திருப்புமுனையாக அமைந்தது என நியூஸிலாந்து வேகப்பந்துவீச்சாளர் டிம் சௌதி தெரிவித்துள்ளார்.

நியூஸிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் வெல்லிங்டனில் நேற்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூஸிலாந்து முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்களுக்கு தத்தளித்துக் கொண்டிருந்தது. அஜின்க்யா ரஹானேவும், ரிஷப் பந்த்தும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

எனவே, இன்றைய இரண்டாவது நாள் ஆட்டத்தில் ரஹானே - பந்த் பாட்னர்ஷிப்தான் இந்திய அணியின் இன்னிங்ஸைத் தீர்மானிக்கப்போகிறது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அஜின்க்யா ரஹானேவின் மிகத் தவறான அழைப்பால் பந்த் துரதிருஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். அவர் 19 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதன் காரணமாக இந்திய அணி வெறும் 33 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. ரஹானேவும் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன்மூலம், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 165 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடிய நியூஸிலாந்து அணி இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 216 ரன்கள் எடுத்து 51 ரன்கள் முன்னிலையில் உள்ளது. 

இந்நிலையில், இரண்டாவது நாள் ஆட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நியூஸிலாந்து வேகப்பந்துவீச்சாளர் டிம் சௌதி ரிஷப் பந்த்தின் ரன் அவுட்டே இந்திய இன்னிங்ஸின் திருப்புமுனையாக அமைந்தது எனத் தெரிவித்தார்.

அஜின்க்யா ரஹானேவின் விக்கெட்டை வீழ்த்த ஏதேனும் வியூகம் வகுக்கப்பட்டதா என்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர்,

"இல்லை, பந்த்தின் ரன் அவுட்தான் மிகப் பெரிய விஷயம். அவர் ஆபத்தான வீரராக இருப்பதால், இரண்டாவது புதிய பந்தை நோக்கி நகரும்போது ரஹானேவுடன் இணைந்து அவர் துரிதமாக ரன் குவித்திருப்பார்" என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com