மாமனாரின் இறுதிச்சடங்கில் பங்கேற்றதால் மே.இ. தீவுகள் அணியின் பயிற்சியாளருக்கு நெருக்கடியா?

இங்கிலாந்து - மே.இ. தீவுகள் ஆகிய அணிகளுக்கு இடையிலான மூன்று ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூலை 8 முதல் தொடங்குகிறது.
படம் - © WICB Media
படம் - © WICB Media

மாமனாரின் இறுதிச்சடங்கில் பங்கேற்றதால் மே.இ. தீவுகள் அணியின் பயிற்சியாளரை நீக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்துள்ளன. ஆனால் இதில் தவறு எதுவுமில்லை என மே.இ. தீவுகள் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ரிக்கி ஸ்கெரிட் கூறியுள்ளார்.

இங்கிலாந்து - மே.இ. தீவுகள் ஆகிய அணிகளுக்கு இடையிலான மூன்று ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூலை 8 முதல் தொடங்குகிறது. ஜூலை 28 அன்று டெஸ்ட் தொடர் முடிவடைகிறது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக மூன்று டெஸ்டுகளும் காலி மைதானத்தில் நடைபெறும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான மே.இ. தீவுகள் அணியில் டேரன் பிராவோ, ஹெட்மையர், கீமோ பால் ஆகிய மூன்று வீரர்களும் இடம்பெறவில்லை. கரோனா அச்சுறுத்தல் காரணமாக இங்கிலாந்துக்குச் செல்ல அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளார்கள்.

டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக 25 மே.இ. தீவுகள் வீரர்களும் 11 நிர்வாகிகளும் இங்கிலாந்துக்கு வந்துள்ளார்கள். அனைத்து வீரர்கள், நிர்வாகிகளுக்கும் மேற்கிந்தியத் தீவுகளிலும் இங்கிலாந்திலும் கரோனா டெஸ்ட் பரிசோதனை நடைபெற்றது. அனைவரின் முடிவுகளும் நெகடிவ் என வந்துள்ளது. லண்டனில் வசிக்கும் மே.இ. தீவுகள் பயிற்சியாளர் பில் சிமன்ஸ், அணியினருடன் இணைந்துகொண்டுள்ளார். அனைவரும் எமிரேட்ஸ் ஓல்ட் டிரஃபோர்டில் மூன்று வாரங்கள் தனிமைப்படுத்திக்கொண்டு கூடவே பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் தனது மாமனார் இறந்ததால் அவருடைய இறுதிச்சடங்கில் மே.இ. தீவுகள் அணியின் பயிற்சியாளர் சிம்மன்ஸ் கடந்த வாரம் பங்கேற்றார். மே.இ. தீவுகள் கிரிக்கெட் வாரியத்தின் அனுமதி பெற்று அவர் பயிற்சி முகாமை விட்டு வெளியே வந்தாலும் இதன்மூலம் வீரர்களின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளார் எனப் பல்வேறு தரப்பினரும் விமரிசித்துள்ளார்கள். இறுதிச்சடங்கில் பங்கேற்ற சிம்மன்ஸ் தற்போது விடுதியில் சுயமாகத் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். கரோனா பரிசோதனை மேற்கொண்டு அதன் முடிவுகள் கிடைத்த பிறகு மீண்டும் அணியினருடன் இணைந்துகொள்வார்.

சிம்மன்ஸைப் பதவி நீக்கம் செய்யவேண்டியதில்லை. அவர் அனுமதி பெற்றுத்தான் சென்றார். பரிசோதனை முடிவில் நெகடிவ் என வந்தபிறகு மீண்டும் பயிற்சி முகாமில் கலந்துகொள்வார் என மே.இ. தீவுகள் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ரிக்கி ஸ்கெரிட் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com