ஆர்ச்சரால் 3-வது டெஸ்டில் நல்ல மனநிலையுடன் விளையாட முடியுமா?: நாசர் ஹூசைன் கேள்வி

ஜோஃப்ரா ஆர்ச்சரால் 3-வது டெஸ்டில் நல்ல மனநிலையுடன் விளையாட முடியுமா என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆர்ச்சரால் 3-வது டெஸ்டில் நல்ல மனநிலையுடன் விளையாட முடியுமா?: நாசர் ஹூசைன் கேள்வி

கடந்த சில நாள்களாக சர்ச்சைகளுக்கு ஆளானதால் ஜோஃப்ரா ஆர்ச்சரால் 3-வது டெஸ்டில் நல்ல மனநிலையுடன் விளையாட முடியுமா என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதனால் 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது மேற்கிந்தியத் தீவுகள் அணி. எனினும் 2-வது டெஸ்டை 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது இங்கிலாந்து அணி. பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் அசத்திய பென் ஸ்டோக்ஸ், ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இதனால் டெஸ்ட் தொடர் 1-1 சமனில் உள்ளது. 3-வது டெஸ்ட், மான்செஸ்டரில் ஜூலை 24 அன்று நடைபெறவுள்ளது.

2-வது டெஸ்ட் ஆட்டத்துக்கான 13 பேர் கொண்ட இங்கிலாந்து அணி முதலில் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் ஆர்ச்சர் இடம்பெற்றிருந்தார். ஆனால் பாதுகாப்பு விதிமுறைகளை அவர் மீறியதால் 2-வது டெஸ்டிலிருந்து நீக்கப்பட்டார். செளதாம்ப்டனிலிருந்து மான்செஸ்டருக்குச் செல்லும் வழியில் விதிமுறையை மீறி தனது வீட்டுக்குச் சென்றார் ஆர்ச்சர். ஒவ்வொரு வீரரின் அடையாள அட்டையிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் எந்த ஒரு வீரராவது பாதுகாப்பு விதிமுறையை மீறினால் கண்டுபிடித்துவிட முடியும். செளதாம்ப்டனிலிருந்து மான்செஸ்டருக்கு ஒவ்வொரு வீரரும் தனியாகச் சென்றுள்ளார்கள். பேருந்தில் சென்றால் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியாது என்பதால் அனைவரும் அவரவர் காரில் சென்றுள்ளார்கள். இதில், ஆர்ச்சர் மட்டும் செல்லும் வழியில் உள்ள தனது வீட்டுக்குச் சென்றதால் விதிமுறையை மீறிய குற்றத்துக்காக 2-வது டெஸ்டிலிருந்து நீக்கப்பட்டார்.

2-வது டெஸ்டிலிருந்து நீக்கப்பட்ட ஆர்ச்சர், 5 நாள்கள் சுயமாகத் தனிமைப்படுத்திக் கொண்டார். பிறகு அவருக்கு இருமுறை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கரோனா இல்லை என்பது உறுதியானது. இதனால் இங்கிலாந்து அணியினருடன் இணைந்துள்ள ஆர்ச்சர், வழக்கம்போல பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

முதல் டெஸ்டில் நன்றாகப் பந்துவீசியதால் 2-வது டெஸ்டில் ஆர்ச்சர் நிச்சயம் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் 3-வது டெஸ்டில் ஆர்ச்சர் விளையாடுவது குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் ஆங்கில ஊடகம் ஒன்றில் கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

5 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் ஆர்ச்சர். அப்போது தன்னைப் பற்றிய அனைத்து செய்திகளையும் படித்துள்ளார். இது ஆரோக்கியமானதல்ல. அவரைக் கவனிக்க வேண்டியது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் பொறுப்பு. அவர் தோள் மீது கை போட்டு அவர் நலமாக உள்ளாரா என்பதை யாராவது ஒருவர் கவனிக்க வேண்டும். இதை ஜோ ரூட்டும் பென் ஸ்டோக்ஸும் செய்திருப்பது நல்லது.

ஆர்ச்சரிடமிருந்து சிறந்த ஆட்டத்திறனை இங்கிலாந்து எதிர்பார்க்கும் தருணத்தில் அவரால் நல்ல மனநிலையுடன் விளையாட முடியுமா? அவராக வந்து நான் நலமாக உள்ளேன் என்று சொன்னால் வேறு. ஆனால் அவருடைய செயல்களுக்குக் கிடைத்த எதிர்வினைகளால் அவர் மிகவும் வேதனையடைந்துள்ளார் என்பது தெரிகிறது என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com