உனாட்கட் அசத்தல் பந்துவீச்சு: ரஞ்சி இறுதிச்சுற்றுக்கு செளராஷ்டிரம் தகுதி!

குஜராத்துக்கு எதிரான அரையிறுதிச்சுற்றை 92 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ரஞ்சி இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது செளராஷ்டிரம் அணி.
உனாட்கட் அசத்தல் பந்துவீச்சு: ரஞ்சி இறுதிச்சுற்றுக்கு செளராஷ்டிரம் தகுதி!

குஜராத்துக்கு எதிரான அரையிறுதிச்சுற்றை 92 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ரஞ்சி இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது செளராஷ்டிரம் அணி.

ராஜ்கோட்டில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய செளராஷ்டிரம் முதல் இன்னிங்ஸில் 304 ரன்கள் எடுத்தது. குஜராத் தனது முதல் இன்னிங்ஸில் 252 ரன்கள் மட்டும் எடுத்தது. இதனால் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற செளராஷ்டிரம் அணி, 2-வது இன்னிங்ஸில் 274 ரன்கள் எடுத்தது. 

ரஞ்சி அரையிறுதிச்சுற்றை வெல்ல குஜராத் அணிக்கு 327 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

முதல் 5 விக்கெட்டுகளை 63 ரன்களுக்குள் இழந்தது குஜராத் அணி. எனினும் பார்தீவ் படேலும் சிராக் காந்தியும் கூட்டணி அமைத்து செளராஷ்டிர அணிக்கு நெருக்கடி அளித்தார்கள். கடைசியில் பார்தீவ் படேல் 93 ரன்களிலும் காந்தி 96 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். கடுமையாகப் போராடிய குஜராத் அணி, 72.2 ஓவர்களில் 234 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. செளராஷ்டிர அணியின் உனாட்கட், முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளும் 2-வது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினார். 

கொல்கத்தாவில் நடைபெற்ற ரஞ்சி கோப்பை அரையிறுதிச்சுற்றில் பலம் வாய்ந்த கர்நாடகத்தை பெங்கால் அணி வென்று இறுதிச்சுற்றுக்கு நுழைந்தது. 

ரஞ்சி இறுதி ஆட்டம் மார்ச் 9 அன்று ராஜ்கோட்டில் நடைபெறவுள்ளது. இதில் செளராஷ்டிரம் - பெங்கால் அணிகள் மோதவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com