டி20 உலகக் கோப்பைக்குப் பதிலாக ஐபிஎல்?: பிசிசிஐயின் புதிய திட்டம்!

டி20 உலகக் கோப்பைப் போட்டியை ஐசிசி ஒத்தி வைத்தால், அக்டோபர் - நவம்பர் மாதங்களில் ஐபிஎல் போட்டியை நடத்த...
டி20 உலகக் கோப்பைக்குப் பதிலாக ஐபிஎல்?: பிசிசிஐயின் புதிய திட்டம்!

இந்த வருடம் ஐபிஎல் போட்டி நடக்குமா இல்லையா என்கிற கவலையில் இந்திய ரசிகர்கள் இருக்க, தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைப் போட்டி குறித்தும் சந்தேகங்கள் எழுந்துள்ளன.

ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை டி20 உலகக் கோப்பை நடைபெறுகிறது.

கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஒராண்டுக்கு ஒத்திவைக்கப்படுவதாக சா்வதேச ஒலிம்பிக் கமிட்டி, ஜப்பான் போட்டி அமைப்புக் குழு அதிகாரப்பூா்வமாக சமீபத்தில் அறிவித்தது. வரும் ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதாக இருந்தது. விளையாட்டு வீரா்கள், அதிகாரிகள், போட்டி தொடா்புடையவா்கள், சா்வதேச சமூகத்தின் உடல்நலனை பாதுகாக்க ஏதுவாக இந்த முடிவு எடுக்கப்பட்டது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் தொடர்கள், ஐபிஎல் போட்டி என அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைப் போட்டி திட்டமிட்டபடி அதே தேதிகளில் நடைபெறுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்திரேலியாவில் சர்வதேச எல்லைகள் ஆறு மாதங்களுக்கு மூடப்பட்டுள்ளன. அடுத்த ஆறு மாதங்களுக்குள் கரோனோவைக் கட்டுப்படுத்தாவிட்டால் இந்தத் தடை மேலும் தொடரவும் வாய்ப்புண்டு. அப்படியெதுவும் நடந்தால் ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பைப் போட்டியை நடத்த முடியாத சூழல் ஏற்படும். பிறகு 2022-ல் தான் டி20 உலகக் கோப்பையை ஐசிசியால் நடத்த முடியும். அடுத்த வருடம் இப்போட்டியை நடத்த தேதிகள் சாதகமாக இல்லை.

ஆஸ்திரேலியாவின் கட்டுப்பாடுகள் அக்டோபரின் தொடக்கத்தில் முடியும். எனவே டி20 உலகக் கோப்பை திட்டமிட்டபடி நடைபெறும் என ஒரு தரப்பு நம்பிக்கை வைக்கிறது. ஆனால் ஒருவேளை கட்டுப்பாடுகள் தொடர்ந்தால்?

டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெறுவதாக இருக்கும் தேதிகளில் ஐபிஎல் போட்டியை நடத்த பிசிசிஐ இன்னொரு பக்கம் திட்டமிட்டு வருகிறது.

கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் 13-ஆவது சீசன் போட்டிகள் ஏப். 15-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டு விட்டன. மாா்ச் 29-ஆம் தேதி மும்பையில் கோலாகலமாக தொடங்கி இருக்க வேண்டிய ஐபிஎல் தொடா், முறைப்படி தொடங்காததால் லட்சக்கணக்கான ரசிகா்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனா். கரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரே நடைபெறுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.

இந்நிலையில் டி20 உலகக் கோப்பைப் போட்டியை ஐசிசி ஒத்தி வைத்தால், அக்டோபர் - நவம்பர் மாதங்களில் ஐபிஎல் போட்டியை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. எனினும் ஐசிசியின் முடிவை வைத்தே பிசிசிஐயின் திட்டங்கள் செயல்வடிவம் பெறும். எனவே இதுகுறித்த அதிகாரபூர்வத் தகவல்களுக்கு நாம் இன்னும் சில மாதங்கள் காத்திருக்கவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com