புகைப்படம்: iplt20.com
புகைப்படம்: iplt20.com

கரோனாவால் சிக்ஸர் அடிக்க முடியாமல் போய்விட்டது: ரஸ்ஸல் வேதனை

சிக்ஸர் அடித்து இந்திய ரசிகர்களை மகிழ்விக்க முடியாமல் போய்விட்டது என்று...

கரோனா பாதிப்பால் ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் சிக்ஸர் அடித்து இந்திய ரசிகர்களை மகிழ்விக்க முடியாமல் போய்விட்டது என்று கொல்கத்தா நைட்ரைடர்ஸ் வீரர் ஆண்ட்ரூ ரஸ்ஸல் கூறியுள்ளார்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 2 லட்சத்து 52 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 46,400 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் தொடர்கள், ஐபிஎல் போட்டி என அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் 2020 ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் வீரர் ஆண்ட்ரூ ரஸ்ஸல் கூறியதாவது:

இதுபோன்ற சூழலில் சிக்கிக்கொள்ள யாரும் விரும்ப மாட்டோம். ஒட்டு மொத்த உலகையும் கரோனா அச்சுறுத்தியுள்ளது. என்னையும் பாதித்துள்ளது. ஐபிஎல் போட்டியில் பங்கேற்று சிக்ஸர் அடிக்க முடியாமல் செய்துவிட்டது. இந்நேரம் இந்தியாவில் தங்கி, ஐபிஎல் போட்டியில் ஆயிரக்கணக்கான ரசிகர்களுடன் விளையாடும் சூழலில் இருந்திருப்பேன்.

ஐபிஎல் போட்டியில் விளையாடும்போதுதான் எனக்குச் சிலிர்த்துப் போகிறது. சிபிஎல் போட்டியில் விளையாடும்போதும் சிலிர்ப்பு ஏற்படுகிறது. ஆனால் ஐபிஎல்-லில், ஈடன் கார்டன்ஸில் விளையாடும்போது கிடைக்கும் உணர்வுக்கு இணையே இல்லை. முதல் பந்தை எதிர்கொள்ளும் முன்பே ரசிகர்களிடமிருந்து கிடைக்கும் ஆரவாரம் தான் அன்பு. அது எனக்குள் அழுத்தத்தை ஏற்படுத்தினாலும் நல்ல உணர்வுகளையே உண்டாக்குகிறது என்று கூறியுள்ளார்.

2012 முதல் ஐபிஎல் போட்டியில் விளையாடி வருகிறார் ரஸ்ஸல். 2014-ல் கேகேஆர் அணிக்குத் தேர்வானார். 2015-ல் 192 ஸ்டிரைக் ரேட்டுடன் 326 ரன்கள் எடுத்தார். மேலும் 14 விக்கெட்டுகள் எடுத்தும் அசத்தினார். 2016-ல் 188 ரன்களும் 15 விக்கெட்டுகளும் எடுத்தார். ஒரு வருடத் தடைக்குப் பிறகு 2018-ல் 300 ரன்களுக்கு அதிகமாகவும் 13 விக்கெட்டுகளும் எடுத்தார். கடந்த வருடம் தான் திறமையை மேலும் வெளிப்படுத்தி 510 ரன்களும் 11 விக்கெட்டுகளும் எடுத்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com