இந்திய விளையாட்டு ஆணைய மையத்தில் கரோனா வைரஸால் சமையல் தொழிலாளர் பலி

பெங்களூரில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய மையத்தில் கரோனா வைரஸ் காரணமாக சமையல் தொழிலாளர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
இந்திய விளையாட்டு ஆணைய மையத்தில் கரோனா வைரஸால் சமையல் தொழிலாளர் பலி

பெங்களூரில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய மையத்தில் கரோனா வைரஸ் காரணமாக சமையல் தொழிலாளர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 3 லட்சத்து 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 1 லட்சத்து 6 ஆயிரம் பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பெங்களூரில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய மையத்தில் (சாய் அமைப்பு) கரோனா வைரஸ் காரணமாக சமையல் தொழிலாளர் ஒருவர் மரணமடைந்துள்ளார். திங்கள் அன்று மாரடைப்பு காரணமாக மரணமடைந்த சமையல் தொழிலாளரைப் பரிசோதித்துப் பார்த்ததில் அவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருந்தது உறுதியாகியுள்ளது. தன்னுடைய உறவினர் ஒருவருக்குக் குழந்தை பிறந்ததைக் காண மருத்துவமனைக்குச் சென்றுள்ளார் சமையல் ஊழியர். அங்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார்.

சாய் மையத்தில் 60 தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். அனைவரும் மார்ச் 10 முதல் அவரவர் வீட்டிலேயே தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். சாய் மையத்தில் ஆடவர், மகளிர் ஹாக்கி அணிகளின் வீரர், வீராங்கனைகளும் ஒலிம்பிக் போட்டிக்காகத் தடகள வீரர்களும் பயிற்சி பெற்று வருகிறார்கள்.

ஊரடங்கு காலத்துக்குப் பிறகு சாய் மையத்தைத் திறப்பது தொடர்பான கூட்டத்தில் சமையல் தொழிலாளரும் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. அக்கூட்டத்தில் 20, 30 பேர் கலந்துகொண்டதாகவும் தற்போது அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இத்தகவலை சாய் அமைப்பின் அதிகாரி ஒருவர் மறுத்துள்ளார். கடந்த 65 நாள்களும் சாய் அமைப்புக்கு வெளியே தான் சமையல் தொழிலாளர் வசித்து வந்தார். மார்ச் 15 அன்று சாய் மையத்துக்கு அவர் வருகை தந்தாலும் பிரதான கதவுப் பகுதியைத் தாண்டி உள்ளே வரவில்லை என்று கூறியுள்ளார். எனினும் பாதுகாவலர் உள்ளிட்ட 5 பேர் தற்போது பாதுகாப்பு கருதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இச்சம்பவம் காரணமாக ஹாக்கி வீரர், வீராங்கனைகளும் தடகள வீரர்களும் வேறு இடத்துக்கு மாற்றப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வீரர்கள் பயிற்சி பெறும் மைதானத்துக்கும் சமையல் தொழிலாளர் பணியிடத்துக்கும் இடையே நீண்ட தொலைவு உள்ளதால் எதற்காகவும் அச்சப்படவேண்டியதில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com