ஐபிஎல் போட்டியில் தேவ்தத் படிக்கல்லைத் திணற வைத்த பந்துவீச்சாளர்

ரஷித் கான் எனக்கு மிகவும் சவாலாக விளங்கினார். அவர் மிக வேகமாகப் பந்துவீசுவதோடு...
ஐபிஎல் போட்டியில் தேவ்தத் படிக்கல்லைத் திணற வைத்த பந்துவீச்சாளர்

ஐபிஎல் போட்டியில் ரஷித் கானின் பந்துவீச்சை எதிர்கொள்ள மிகவும் சிரமப்பட்டதாக ஆர்சிபி வீரர் தேவ்தத் படிக்கல் கூறியுள்ளார். 

உள்ளூர் போட்டிகளில் கடந்த ஒரு வருடமாகத் தூள் கிளப்பி வரும் தேவ்தத் படிக்கல், ஐபிஎல் போட்டியில் முத்திரை பதித்து ரசிகர்களிடம் ஆர்வத்தைத் தூண்டிவிட்டார். 

கர்நாடகத்தைச் சேர்ந்த 20 வயது தேவ்தத் படிக்கல், சன்ரைசா்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான தனது முதல் ஐபிஎல் ஆட்டத்திலேயே 8 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் விளாசினார். 

2012-க்குப் பிறகு ஐபிஎல்-லில் விளையாடும் முதல் ஆட்டத்திலேயே அரை சதமெடுத்தவர் ஒருவர் மட்டும்தான். 2016-ல் பில்லிங்ஸ் அரை சதம் எடுத்தார். ஐபிஎல்-லில் விளையாடிய முதல் ஆட்டத்திலேயே அரை சதமெடுத்த கடைசி இந்திய வீரர், ஜாதவ். 2010-ல் எடுத்தார். அதன்பிறகு முதல் ஐபிஎல் ஆட்டத்திலேயே அரை சதம் எடுத்து அசத்தினார் படிக்கல். மேலும், 2008-க்குப் பிறகு முதல் ஆட்டத்திலேயே அரை சதமெடுத்த ஆர்சிபி வீரரும் படிக்கல் தான்.

விஜய் ஹசாரே கோப்பை, சையத் முஷ்டாக் அலி டி20 கோப்பை என இரு உள்ளூர் போட்டிகளிலும் அதிக ரன்கள் எடுத்து அசத்தினார். ஐபிஎல் போட்டியில் 15 ஆட்டங்களில் 5 அரை சதங்களுடன் 473 ரன்கள் எடுத்தார். ஆர்சிபி அணியில் அதிக ரன்கள் எடுத்தவர் படிக்கல் தான்.

இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் ரஷித் கானின் பந்துவீச்சை எதிர்கொள்ள மிகவும் சிரமப்பட்டதாக படிக்கல் கூறியுள்ளார். க்ரிக்இன்ஃபோ இணையத்தளத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

ரஷித் கான் எனக்கு மிகவும் சவாலாக விளங்கினார். அவர் மிக வேகமாகப் பந்துவீசுவதோடு அதே வேகத்தின் பந்தையும் சுழலச் செய்கிறார். அவர் பந்தை எதிர்கொள்வது அவ்வளவு எளிதாக இல்லை. அவர் பந்தை எதிர்கொண்டபோது, இதுபோன்ற ஒரு பந்துவீச்சு எனக்குப் புதிதாக இருப்பதாக உணர்ந்தேன். 

உள்ளூர் போட்டிகளிலும் ஐபிஎல் போட்டியிலும் ஏராளமான ரன்கள் எடுத்துள்ள நான் அடுத்ததாக இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்கிற கனவுடன் உள்ளேன். இதற்காக என் பேட்டிங் திறமையை நிச்சயம் மேம்படுத்துவேன் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com