ஐசிசியின் புதிய தலைவராக நியூசிலாந்தின் கிரேக் தேர்வு!

மனோகரின் பதவிக்காலம் இந்த வருட ஜூலை மாதத்துடன் முடிவடைந்ததால்...
படம்: twitter.com/ICC
படம்: twitter.com/ICC

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) புதிய தலைவராக நியூசிலாந்தின் கிரேக் பார்கிளே தேர்வாகியுள்ளார். 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) வாரியம் சாரா முதல் தலைவராக இந்தியாவைச் சேர்ந்த சஷாங்க் மனோகர் போட்டியின்றி 2016-ம் வருடம் மே மாதம் தேர்வு செய்யப்பட்டார். 2018 மே மாதம், ஐசிசி தலைவராக சஷாங்க் மனோகர் மீண்டும் தேர்வானார். அவர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக ஐசிசி தெரிவித்தது.

மனோகரின் பதவிக்காலம் இந்த வருட ஜூலை மாதத்துடன் முடிவடைந்ததால் பதவியிலிருந்து அவர் விலகினார். அடுத்த முறை தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிட மாட்டேன் என அறிவித்தார். இதையடுத்து ஐசிசி அமைப்பின் தற்காலிகத் தலைவராக இம்ரான் கவாஜா தேர்வானார். 

இந்நிலையில் ஐசிசி அமைப்பின் வாரியம் சாரா 2-வது தலைவராக நியூசிலாந்தின் கிரேக் பார்கிளே தேர்வாகியுள்ளார். ஐசிசி குழுவில் உள்ள 16 வாக்குகளில் 11 வாக்குகளைப் பெற்றால் மட்டுமே கிரேக் தேர்வாக முடியும் என்கிற சூழலில் 2-வது சுற்றில் 11-வது வாக்கைச் செலுத்தி அவருக்கு ஆதரவளித்தது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம். இதையடுத்து கிரேக் பார்கிளேவின் தேர்வு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2012 முதல் நியூசிலாந்து கிரிக்கெட்டின் இயக்குநராக அவர் பணியாற்றியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com