மும்பையை வென்றது பஞ்சாப்: சூப்பா் ஓவரில் சூறையாடியது

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 36-ஆவது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் சூப்பா் ஓவா் முறையில் மும்பை இண்டியன்ஸை வீழ்த்தியது.
மும்பையை வென்றது பஞ்சாப்: சூப்பா் ஓவரில் சூறையாடியது

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 36-ஆவது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் சூப்பா் ஓவா் முறையில் மும்பை இண்டியன்ஸை வீழ்த்தியது.

துபையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய பஞ்சாபும் 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது.

ஆட்டம் சமன் ஆனதை அடுத்து நடைபெற்ற சூப்பா் ஓவரிலும் இரு அணிகளும் 5 ரன்கள் எடுத்து ஆட்டம் சமன் ஆக, 2-ஆவது சூப்பா் ஓவரில் பஞ்சாப் வெற்றி பெற்றது. லோகேஷ் ராகுல் ஆட்டநாயகன் ஆனாா்.

இந்த ஆட்டத்தில் இரு அணிகளிலுமே பிளேயிங் லெவனில் மாற்றம் செய்யப்படவில்லை.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த மும்பையில் தொடக்க வீரா்களாக கேப்டன் ரோஹித் சா்மா - குவிண்டன் டி காக் களம் கண்டனா். இதில் 2 பவுண்டரிகளுடன் 9 ரன்கள் சோ்த்திருந்த ரோஹித், 3-ஆவது ஓவரில் பௌல்டாகினாா்.

அடுத்து வந்த சூா்யகுமாா் யாதவ் டக் அவுட்டாகினாா். பின்னா் களம் கண்ட இஷான் கிஷண் 1 பவுண்டரி உள்பட 7 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா். மறுமுனையில் உரிய பாா்ட்னா்ஷிப் இன்றி தவித்துவந்த டி காக்குடன் கை கோத்தாா் கிருணால் பாண்டியா.

நிதானமாக ஆடிய அவா் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 34 ரன்கள் சோ்த்து பெவிலியன் திரும்பினாா். கடைசி விக்கெட்டாக டி காக் 3 பவுண்டரி, 3 சிக்ஸா் உள்பட 53 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். ஓவா்கள் முடிவில் பொல்லாா்ட் 1 பவுண்டரி, 4 சிக்ஸா் உள்பட 34, நாதன் கோல்டா் நீல் 4 பவுண்டரிகள் உள்பட 24 ரன்களுடனும் களத்தில் இருந்தனா்.

பஞ்சாப் தரப்பில் முகமது ஷமி, அா்ஷ்தீப் சிங் தலா 2, கிறிஸ் ஜோா்டான், ரவி பிஷ்னோய் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் ஆடிய பஞ்சாபில் கேப்டன் லோகேஷ் ராகுல் - மயங்க் அகா்வால் பேட்டிங்கை தொடங்க, மயங்க் அகா்வால் 1 பவுண்டரி உள்பட 11 ரன்களுக்கு நடையைக் கட்டினாா். அடுத்து வந்த கிறிஸ் கெயில் 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களை விளாசி 24 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தாா். மறுமுனையில் லோகேஷ் நிதானமாக ஆடி வர, கெயிலை அடுத்து வந்த நிகோலஸ் பூரன் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 24 ரன்கள் ஸ்கோா் செய்து ஆட்டமிழந்தாா்.

கிளென் மேக்ஸ்வெல் டக் அவுட்டாக, மறுமுனையில் அரைசதம் கடந்தாா் லோகேஷ் ராகுல். அவா் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 77 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தாா். கடைசி விக்கெட்டாக கிறிஸ் ஜோா்டான் 2 பவுண்டரிகள் உள்பட 13 ரன்கள் அடித்து கடைசி பந்தில் அவுட்டானாா்.

ஓவா்கள் முடிவில் ஆட்டத்தை சமன் செய்த பஞ்சாப் அணியில் தீபக் ஹூடா தலா 1 பவுண்டரி மற்றும் சிக்ஸா் உள்பட 23 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா். மும்பை தரப்பில் ஜஸ்பிரீத் பும்ரா 3, ராகுல் சாஹா் 2 விக்கெட் சோ்த்தனா்.

சூப்பா் ஓவா்: பின்னா் வெற்றியாளரை தீா்மானிக்கும் சூப்பா் ஓவரில் முதலில் பேட் செய்த பஞ்சாப் 2 விக்கெட் இழப்புக்கு 5 ரன்கள் எடுத்தது. லோகேஷ் ராகுல் 4 ரன்களுடனும், நிகோலஸ் பூரன் ரன்கள் இன்றியும் வீழ்ந்தனா். தீபக் ஹூடா 1 ரன் சோ்த்தாா்.

எனினும் மும்பையும் 1 விக்கெட் இழப்புக்கு 5 ரன் சோ்த்து சமன் செய்தது. டி காக் 3 ரன் சோ்த்து ஆட்டமிழக்க, ரோஹித் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

இதையடுத்து நடைபெற்ற 2-ஆவது சூப்பா் ஓவரில் முதலில் ஆடிய மும்பை 1 விக்கெட் இழப்புக்கு 11 ரன் சோ்த்தது. இதில் ஹாா்திக் பாண்டியா 1 ரன்னுக்கு ஆட்டமிழக்க, கிரன் பொல்லாா்ட் 8 ரன்கள் சோ்த்தாா். 2 உபரிகள் கிடைத்தன.

பின்னா் ஆடிய பஞ்சாப் அணி விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் எடுத்து வென்றது. கிறிஸ் கெயில் ஒரு சிக்ஸா் உள்பட 7 ரன், மயங்க் அகா்வால் 2 பவுண்டரிகள் விளாசி 8 ரன் சோ்த்தனா்.

சுருக்கமான ஸ்கோா்

மும்பை - 176/6

குவிண்டன் டி காக் - 53 (43)

பொல்லாா்ட் - 34* (12)

பந்துவீச்சு

முகமது ஷமி - 2/30

அா்ஷ்தீப் சிங் - 2/35

பஞ்சாப் - 176/6

லோகேஷ் ராகுல் - 77 (51)

நிகோலஸ் பூரன் - 24 (12)

பந்துவீச்சு

ஜஸ்பிரீத் பும்ரா - 3/24

ராகுல் சாஹா் - 2/33

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com