அன்றிரவு என்ன நடந்தது?: மெளனம் கலைத்தார் சுரேஷ் ரெய்னா

அன்றிரவு என்ன நடந்தது, யார் செய்தார்கள் என்று இன்று வரை எங்களுக்குத் தெரியவில்லை.
அன்றிரவு என்ன நடந்தது?: மெளனம் கலைத்தார் சுரேஷ் ரெய்னா
Published on
Updated on
1 min read

தன் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பஞ்சாப் காவல்துறையிடம் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கோரிக்கை விடுத்துள்ளார். 

கரோனா பரவல் காரணமாக நிகழாண்டு இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டி தள்ளிவைக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பா் 19-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டி, நவம்பா் 10-ம் தேதி முடிவடைகிறது. துபை, அபுதாபி, ஷாா்ஜாவில் உள்ள மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

பஞ்சாபில் உள்ள பதான்கோட் மாவட்டத்தில் கொள்ளையா்கள் தாக்கியதில் ரெய்னாவின் உறவினா் உயிரிழந்தாா். இதையடுத்து, இந்த வருட ஐபிஎல் போட்டியிலிருந்து சுரேஷ் ரெய்னா விலகியுள்ளார். இத்தகவலை சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்தது. எனினும் இதுவரை தன் விலகல் குறித்து எதுவும் பேசாத ரெய்னா, தன் குடும்பத்தினருக்கு நேர்ந்தது பற்றி ட்வீட் செய்துள்ளார்.

மதோபூா் அருகே உள்ள தரியால் கிராமத்தில் அசோக் குமாா் (58) என்பவா், தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தாா். அவரது வீட்டில் கொள்ளையடிப்பதற்காக ஒரு கும்பல் கடந்த ஆகஸ்ட் 19 இரவில் அங்குச் சென்றனா். அப்போது வீட்டில் இருந்த அசோக் குமாா், அவரது தாய் சத்யாதேவி, மனைவி ஆஷா தேவி, மகன்கள் அபின், கௌஷல் ஆகியோரைக் கொள்ளையா்கள் தாக்கினா். அதன் பின்னா் வீட்டில் இருந்த நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனா். இந்த சம்பவத்தில் தலையில் பலத்த காயமடைந்த அசோக் குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மற்றவா்கள் பலத்த காயமடைந்தனா். 

ரெய்னா தந்தை சகோதரியான ஆஷா தேவி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. ரெய்னாவின் சகோதரர்களான 32 வயது கெளசல் குமாரும் 24 வயது அபின் குமாரும் இச்சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ரெய்னா தகவல் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து ட்விட்டரில் எழுதியுள்ள ரெய்னா, பஞ்சாப் காவல்துறைக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளார். அவர் தெரிவித்ததாவது:

பஞ்சாப்பில் என் குடும்பத்துக்கு நேர்ந்தது கொடுமையை விடவும் மேலானது. என் மாமா படுகொலை செய்யப்பட்டுள்ளார். என் அத்தையும் சகோதரர்களும் பலமாகக் காயமடைந்துள்ளார்கள். துரதிர்ஷ்டவசமாக உயிருக்குப் போராடிய என் சகோதரரும் நேற்றிரவு மரணம் அடைந்துள்ளார். என் அத்தை இன்னும் உயிருக்குப் போராடி வருகிறார். உயிா் காக்கும் மருத்துவச் சாதனங்களின் மூலம் அவருக்குச் சிகிச்சையளிக்கப்படுகிறது.

அன்றிரவு என்ன நடந்தது, யார் செய்தார்கள் என்று இன்று வரை எங்களுக்குத் தெரியவில்லை. இந்த வழக்கைக் கவனிக்குமாறு பஞ்சாப் காவல்துறையிடம் கோரிக்கை வைக்கிறேன். இந்தக் கொடுமையான செயலைச் செய்தவர்கள் யார் என்பதாவது எங்களுக்குத் தெரிய வேண்டும். அந்தக் குற்றவாளிகள் மேலும் குற்றங்கள் செய்யாதவாறு தடுக்கப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com