24-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் எப்போது?: பிரெஞ்சு ஓபன் போட்டியிலிருந்து செரீனா வில்லியம்ஸ் விலகல்!

பிரெஞ்சு ஓபன் போட்டியிலிருந்து விலகுவதாகப் பிரபல வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் அறிவித்துள்ளார்...
24-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் எப்போது?: பிரெஞ்சு ஓபன் போட்டியிலிருந்து செரீனா வில்லியம்ஸ் விலகல்!

காயம் காரணமாக பிரெஞ்சு ஓபன் போட்டியிலிருந்து விலகுவதாகப் பிரபல வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் அறிவித்துள்ளார்.

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி வழக்கமாக மே-ஜூன் மாதங்களில் நடைபெறும். இந்த ஆண்டு கரோனா வைரஸ் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு இப்போது நடைபெறுகிறது. 

மகளிா் ஒற்றையா் பிரிவில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் தனது முதல் சுற்றில் சகநாட்டவரான கிறிஸ்டி அன்னை எதிா்கொண்டார். 7-6(2), 6-0 என நேர்செட்களில் வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

இந்நிலையில் காயம் காரணமாக பிரெஞ்சு ஓபன் போட்டியிலிருந்து வெளியேறுவதாக செரீனா வில்லியம்ஸ் அறிவித்துள்ளார். இதனால் அவருடைய 24-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்துக்காக மேலும் காத்திருக்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது.

வெள்ளையர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த பணக்காரர்களின் விளையாட்டான டென்னிஸில் தொழில்முறை வீராங்கனையாக 1995-ல் செரீனா கால் பதித்தார். அப்போது அவருக்கு வயது 14. அதன்பிறகு அபாரமாக ஆடிய செரீனா 1998-ல் முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டியில் ஆடும் வாய்ப்பை பெற்றார். அந்தப் போட்டியின் 2-வது சுற்றில் தனது மூத்த சகோதரியான வீனஸிடம் தோல்வி கண்ட செரீனா, 1999-ல் நடைபெற்ற அமெரிக்க ஓபனில் ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸை வீழ்த்தி முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றினார். அதன்பிறகு டென்னிஸ் உலகின் தவிர்க்க முடியாத வீராங்கனையாக உருவெடுத்த செரீனா, ஏறக்குறைய 6 ஆண்டுகள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்துள்ளார்.

2017-ம் ஆண்டு நவம்பரில் திருமணம் செய்துகொண்டார் செரீனா வில்லியம்ஸ். அதே ஆண்டில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின்போது 3 மாதம் கர்ப்பமாக இருந்தார். எனினும் துணிச்சலுடன் போட்டியில் கலந்துகொண்டு சாம்பியனாகவும் ஆனார். இந்தப் பட்டத்தை வென்றதன் மூலம் 'ஓபன் எரா'வில் (1968-ல் அமெச்சூர் வீரர்களுடன் தொழில்முறை வீரர்களும் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். அது முதலான காலமே "ஓபன் எரா' ஆகும்.) அதிக பட்டங்களை (23) வென்றவர் என்ற சாதனையைப் படைத்தார் செரீனா. முன்னதாக ஸ்டெஃபி கிராஃப் 22 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றிருந்ததே சாதனையாக இருந்தது. 

இன்னும் ஒரு கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்லும் பட்சத்தில் மகளிர் டென்னிஸ் வரலாற்றில் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றவரான மார்க்ரெட் கோர்ட்டின் சாதனையை சமன் செய்வார் செரீனா.

கடைசி நான்கு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளின் இறுதிச்சுற்றுகளிலும் தோற்றுள்ளார் செரீனா. சமீபத்தில் நடைபெற்ற யு.எஸ். ஓபன் போட்டியில் அரையிறுதிச் சுற்றில் தோல்வியடைந்தார். இப்போது காயத்தால் பிரெஞ்சு ஓபன் போட்டியில் முதல் சுற்றுக்குப் பிறகு வெளியேறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com