2022 கத்தார் கால்பந்து உலகக்கோப்பை: தகுதிச்சுற்று ஆட்டங்கள் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைப்பு
By DIN | Published On : 12th August 2020 02:06 PM | Last Updated : 12th August 2020 02:06 PM | அ+அ அ- |

2022 கத்தார் கால்பந்து உலகக்கோப்பைக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் அடுத்த வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
2022 ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிக்கான தகுதிச்சுற்றில் இந்திய அணி அக்டோபர் 8 அன்று கத்தாரையும் வெளிநாட்டில் நவம்பர் 12 அன்று வங்கதேசத்தையும் 5 நாள்கள் கழித்து இந்தியாவில் ஆப்கானிஸ்தானையும் எதிர்கொள்ள இருந்தது.
ஈ பிரிவில் உள்ள இந்திய அணி, 5 ஆட்டங்களில் மூன்று புள்ளிகளுடன் 4-ம் இடத்தில் உள்ளது. ஓமனுடன் 1-2 எனத் தோற்ற இந்திய அணி கத்தாருடனான ஆட்டத்தில் கோல் எதுவுமின்றி டிரா செய்தது. பிறகு 1-1 என வங்கதேசம், ஆப்கானிஸ்தானுடன் டிரா செய்த இந்திய அணி, கோல் எதுவுமின்றி ஓமனுடன் டிரா செய்தது. இந்திய அணி இன்னும் 3 ஆட்டங்களில் விளையாட வேண்டும். புள்ளிகள் பட்டியலில் 3-ம் இடம் பிடித்தால் ஏஎஃப்சி ஆசிய கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெற்று விடும்.
இந்நிலையில் கரோனா அச்சுறுத்தலால் பல சர்வதேச ஆட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் 2022 ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிக்கான தகுதிச்சுற்று ஆட்டங்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 2022 கத்தார் கால்பந்து உலகக்கோப்பைக்கான தகுதிச்சுற்று ஆட்டங்களும் 2023 சீனா ஆசியக் கோப்பைக்கான தகுதிச்சுற்று ஆட்டங்களும் அடுத்த வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.