2-வது டெஸ்ட் நாளை தொடக்கம்: ஸ்டோக்ஸ் விலகலால் இங்கிலாந்துக்குப் பாதிப்பா?

ஸ்டோக்ஸ் இல்லாமல் இங்கிலாந்து அணி 2-வது டெஸ்டில் வெற்றி பெறுமா...
2-வது டெஸ்ட் நாளை தொடக்கம்: ஸ்டோக்ஸ் விலகலால் இங்கிலாந்துக்குப் பாதிப்பா?

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என வென்றது இங்கிலாந்து அணி. அடுத்ததாக பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து அணி. 2-வது டெஸ்ட் நாளை முதல் செளதாம்ப்டனில் தொடங்குகிறது.

கடந்த இரு இங்கிலாந்துச் சுற்றுப்பயணங்களிலும் ஆறு டெஸ்டுகளில் விளையாடிய பாகிஸ்தான் அணி 3 டெஸ்டுகளில் வெற்றி பெற்று 3 டெஸ்டுகளில் தோல்வியடைந்துள்ளது. இதனால் இந்த டெஸ்ட் தொடர் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சொந்தக் காரணங்களுக்காக நியூசிலாந்து செல்ல வேண்டியிருப்பதால் கடைசி இரு டெஸ்டுகளில் இருந்து ஸ்டோக்ஸ் விலகியுள்ளார். இதனால் இந்த அம்சம், பாகிஸ்தானுக்குச் சாதகமாக அமைய வாய்ப்புள்ளதாகப் பலரும் கருதுகிறார்கள். ஸ்டோக்ஸ் இல்லாமல் இங்கிலாந்து அணி எப்படி விளையாடும், ஸ்டோக்ஸ் இல்லாத இங்கிலாந்து அணியை பாகிஸ்தான் எப்படி எதிர்கொள்ளும் என்கிற எதிர்பார்ப்பில் உள்ளார்கள் ரசிகர்கள். 

பென் ஸ்டோக்ஸ் பற்றி ஆர்ச்சர் கூறியதாவது: பென் ஸ்டோக்ஸ் இல்லாமல் பணியை நாங்கள் முடிக்க வேண்டியுள்ளது. பந்து வீசாமல், பேட்டிங் செய்யாமல் அவர் இருந்தாலும் அவர் எங்களுடன் இருக்க வேண்டும் என நினைப்போம். ஆடுகளத்தில் அவர் என்ன செய்வார் என்பதைக் காட்டிலும் ஓய்வறையில் அவருடைய தாக்கம் அதிகமாக இருக்கும். சவால்களை எதிர்கொள்ளும்போது உங்கள் அருகில் ஸ்டோக்ஸ் இருக்க வேண்டும் என நினைப்பீர்கள். எந்தவொரு சவாலுக்கும் அவர் அஞ்சமாட்டார் என்றார்.

ஐசிசி ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் முதல் 10 இடங்களில் மூன்று இங்கிலாந்து வீரர்கள் உள்ளார்கள். டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் வரிசையில் முதல் இடத்தில் பென் ஸ்டோக்ஸ் உள்ளார். 7-ம் இடத்தில் வோக்ஸூம் 10-ம் இடத்தில் பிராடும் உள்ளார்கள். இதனால் முக்கியமான ஒரு ஆல்ரவுண்டர் இல்லாமல் கடைசி இரு டெஸ்டுகளில் விளையாடவுள்ளது இங்கிலாந்து அணி. டெஸ்ட் தொடரின் முடிவை இது மிகவும் பாதிக்கும் என ஸ்டோக்ஸின் விலகல் குறித்து பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள். 

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3-வது டெஸ்டை வென்றதன் மூலம் விஸ்டன் கோப்பையைக் கைப்பற்றிய இங்கிலாந்து அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேறியது. இந்த டெஸ்ட் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பு 146 புள்ளிகளுடன் 4-ம் இடத்தில் இருந்தது. ஆனால் இரு டெஸ்டுகளில் வெற்றி பெற்று 80 புள்ளிகளைச் சேர்த்துக்கொண்டது. இதனால் 226 புள்ளிகளுடன் இந்தியா (360), ஆஸ்திரேலியா (296) ஆகிய அணிகளுக்கு அடுத்ததாக 3-ம் இடத்தைப் பிடித்தது. பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் வெற்றி பெற்றதன் மூலம் கூடுதலாக 40 புள்ளிகளைப் பெற்று தற்போது 266 புள்ளிகளுடன் தொடர்ந்து 3-வது இடத்தில் இங்கிலாந்து அணி உள்ளது. இன்னொரு டெஸ்டில் வெற்றி பெற்றால் ஆஸ்திரேலிய அணியைப் பின்னுக்குத் தள்ளி 2-ம் இடத்தை இங்கிலாந்து அணி பிடித்துவிடும். 

உள்ளங்கையில் இருந்த வெற்றியைப் பறிகொடுத்துவிட்டோம் என பாகிஸ்தான் வீரர்கள் முதல் டெஸ்ட் தோல்வி குறித்து வருந்துகிறார்கள். முதல் டெஸ்டின் கடைசிப் பகுதியில் மட்டும் நாங்கள் சரியாக விளையாடவில்லை. மீண்டு வருவோம் என நம்பிக்கை தெரிவிக்கிறார் பாகிஸ்தான் பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக். 

ஸ்டோக்ஸ் இல்லாமல் இங்கிலாந்து அணி 2-வது டெஸ்டில் வெற்றி பெறுமா, ஸ்டோக்ஸ் இல்லாத இங்கிலாந்து அணியை எளிதில் வீழ்த்துமா பாகிஸ்தான் எனப் பல கேள்விகளுக்கான விடைகளை அளிக்கவுள்ளது 2-வது டெஸ்ட். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com