மகனுக்கு அபராதம் விதித்த தந்தை: இங்கிலாந்து - பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் ஆச்சர்ய சம்பவம்!
By DIN | Published On : 12th August 2020 01:28 PM | Last Updated : 12th August 2020 01:28 PM | அ+அ அ- |

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஐசிசி விதிமுறைகளை மீறியதாக வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராடுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து அணி. 2-வது டெஸ்ட், நாளை தொடங்கவுள்ளது.
இந்நிலையில் முதல் டெஸ்டில் ஐசிசி விதிமுறைகளை மீறியதாக வேகப்பந்து வீச்சாளர் பிராடுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் 2-வது இன்னிங்ஸில் 46-வது ஓவரில் யாசிர் ஷாவை வீழ்த்திய பிறகு அவரிடம் தகாத வார்த்தைகளைக் கூறியதற்காக பிராடுக்கு ஆட்ட ஊதியத்திலிருந்து 15% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒரு அபராதப் புள்ளியையும் பிராட் பெற்றுள்ளார். கடந்த 24 மாதங்களில் இதுபோல மூன்றாவது முறையாகத் தண்டனை பெற்று மொத்தமாக மூன்று அபராதப் புள்ளிகளுடன் உள்ளார்.
முதல் டெஸ்டில் ஆட்ட நடுவராக கிறிஸ் பிராட் பணியாற்றினார். இவர், ஸ்டூவர் பிராடின் தந்தை. கரோனா காரணமாக டெஸ்ட் தொடரில் வெளிநாட்டு நடுவர்கள் இடம்பெறவில்லை. உள்ளூர் நடுவர்களே பணியாற்றி வருகிறார்கள். இதனால் மகனுக்குத் தந்தை தண்டனை அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல்முறையாக இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.