நீங்கள் ஒரு போராளி: சஞ்சய் தத்துக்கு நம்பிக்கையளிக்கும் யுவ்ராஜ் சிங்
By DIN | Published On : 12th August 2020 03:05 PM | Last Updated : 12th August 2020 03:05 PM | அ+அ அ- |

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து சஞ்சய் தத்துக்கு நம்பிக்கையளிக்கும் விதமாக ட்வீட் வெளியிட்டுள்ளார் முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங்.
சஞ்சய் தத்துக்குக் கடந்த சனிக்கிழமை மாலை மூச்சுத்திணறலும் லேசான நெஞ்சு வலியும் ஏற்பட்டது. இதனால் உடனடியாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இல்லை என்பது உறுதியானது.
நான் நன்றாக இருக்கிறேன். மருத்துவர்களின் உதவியால் ஓரிரு நாள்களில் வீட்டுக்குத் திரும்பிவிடுவேன் என்று தகவல் தெரிவித்தார் 61 வயது சஞ்சய் தத்.
பிறகு கடந்த திங்கள் அன்று மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குத் திரும்பினார்.
இந்நிலையில் நுரையீரல் புற்றுநோயால் சஞ்சய் தத் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. திரைப்பட நிபுணர் கோமல் நடா ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது:
நுரையீரல் புற்றுநோயால் சஞ்சய் தத் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் குணமாக அனைவரும் பிரார்த்தனை செய்வோம் என்று ட்வீட் செய்துள்ளார்.
இதையடுத்து சிகிச்சைக்காக அமெரிக்காவுக்குச் செல்கிறார் சஞ்சய் தத். இதுகுறித்து சஞ்சய் தத் ட்விட்டரில் தெரிவித்ததாவது:
மருத்துவச் சிகிச்சைக்காக எனது பணியிலிருந்து சிறிது ஓய்வு எடுத்துக்கொள்கிறேன். என்னுடன் என் குடும்பத்தினரும் நண்பர்களும் உள்ளார்கள். யாரும் கவலைப்பட வேண்டாம். தேவையில்லாமல் ஊகிக்க வேண்டாம். உங்களுடைய வாழ்த்துகளால் விரைவில் நான் பணிக்குத் திரும்புவேன் என்று கூறியுள்ளார்.
நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாக வெளியான செய்தி குறித்து சஞ்சய் தத் எதுவும் விளக்கம் அளிக்கவில்லை.
சஞ்சய் தத்துக்கு நம்பிக்கையளிக்கும் விதமாக ட்வீட் வெளியிட்டுள்ளார் முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங். அதில் அவர் கூறியதாவது:
நீங்கள் எப்போதும் ஒரு போராளி சஞ்சய் தத். இதனால் ஏற்படும் வலியை நான் அறிவேன். நீங்கள் வலுவான மனம் கொண்டவர் என்பதும் இந்தக் காலக்கட்டத்தைக் கடந்து செல்வீர்கள் என்பதும் எனக்குத் தெரியும். உங்களுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். விரைவில் குணமாக வேண்டும் என வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.
சில வருடங்களுக்கு முன்பு நுரையீரல் புற்று நோயால் அவதிப்பட்ட யுவ்ராஜ் சிங் அதிலிருந்து மீண்டு வந்து இந்திய அணிக்காக மீண்டும் விளையாடினார்.