குழந்தை பிறந்தபோது விடுப்பு மறுக்கப்பட்ட விவகாரம்: சுநீல் கவாஸ்கர் விளக்கம்

காயத்தைத் தவிர வேறு காரணங்களுக்காக நான் டெஸ்டில் விளையாடாமல் இருந்ததில்லை...
குழந்தை பிறந்தபோது விடுப்பு மறுக்கப்பட்ட விவகாரம்: சுநீல் கவாஸ்கர் விளக்கம்

1970களில் தனக்கு மகன் பிறந்தபோது விடுப்பு மறுக்கப்பட்ட விவகாரம் குறித்து சுநீல் கவாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரில் கடைசி மூன்று ஆட்டங்களில் இருந்து இந்திய கேப்டன் விராட் கோலி விலகியுள்ளார். ஜனவரியில் தன் மனைவிக்குக் குழந்தை பிறக்கவுள்ளதால் அவர் அருகில் இருக்க வேண்டும் என்பதற்காக முதல் டெஸ்ட் முடிந்த பிறகு இந்தியாவுக்குத் திரும்புகிறார்.

இந்நிலையில் 1976-ல் ரோஹன் கவாஸ்கர் பிறந்தபோது, இந்தியாவுக்குத் திரும்பிச் சென்று மகனைப் பார்க்க சுனில் கவாஸ்கருக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்று சிலர் பழைய கால சம்பவங்களுடன் ஒப்பிட்டு கோலியை விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் இதுபற்றி மிட் டே ஊடகத்தில் கவாஸ்கர் எழுதியதாவது: 

நான் விடுப்பு கேட்டு அது மறுக்கப்பட்டது என்பது பாதி உண்மை. ஆனால் நான் என்ன காரணத்துக்காக விடுமுறை கேட்டேன் என்பது தெளிவாக இல்லை. எனவே என்ன நடந்தது என்பதை நானே சொல்லிவிடுகிறேன். 

என் மனைவிக்குக் குழந்தை பிறந்தபோது அவர் அருகில் நான் இருக்க வேண்டும் என்பதற்காக விடுப்பு கோரவில்லை. நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் என இரட்டைச் சுற்றுப்பயணத்துக்காகச் செல்லும்போது, நான் வெளிநாட்டில் இருக்கும் சமயத்தில் குழந்தை பிறந்துவிடும் என எனக்குத் தெரியும். இந்திய அணிக்கு விளையாட நான் உறுதியளித்துள்ளேன். இதற்கு என் மனைவியும் ஆதரவளித்தார்.

நியூசிலாந்தில் எனக்குக் காயம் ஏற்பட்டது. இதனால் நான்கு வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டது. மூன்று வாரங்கள் கழித்துதான் மேற்கிந்தியத் தீவுகளில் முதல் டெஸ்ட் ஆரம்பமாக இருந்தது. நடுவில் என்னால் விளையாட முடியாது. ஓய்வில் இருக்கும் காரணத்தால் எங்கள் அணி மேலாளர் பாலி உம்ரிகரிடம் விடுப்பு கேட்டேன். சொந்த செலவில் ஊருக்குச் சென்று மே.இ. தீவுகள் டெஸ்ட் ஆரம்பிக்கும் முன்பு திரும்பி வந்துவிடுகிறேன் என்றேன். எனவே காயத்தைத் தவிர வேறு காரணங்களுக்காக நான் டெஸ்டில் விளையாடாமல் இருந்ததில்லை. கூடுதலாக ஒரு வாரம் ஓய்வெடுக்க மருத்துவர் அறிவுறுத்தியபோதும் மே.இ. தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்டில் நான் விளையாடினேன் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com