2022 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை: அட்டவணை வெளியீடு
By DIN | Published On : 15th December 2020 05:12 PM | Last Updated : 15th December 2020 05:12 PM | அ+அ அ- |

இந்திய மகளிர் அணி
நியூசிலாந்தில் நடைபெறவுள்ள மகளிர் ஒருநாள் கோப்பைப் போட்டிக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது.
2021 பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நியூசிலாந்தில் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை நடைபெறுவதாக இருந்தது. இந்தப் போட்டியை கரோனா பரவல் காரணமாக 2022 பிப்ரவரி, மார்ச் மாதங்களுக்கு ஐசிசி ஒத்திவைத்தது.
இந்நிலையில் 2022 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 2022 மார்ச் 4 முதல் ஏப்ரல் 3 வரை நியூசிலாந்தின் ஆறு நகரங்களில் 31 நாள்களுக்கு 31 உலகக் கோப்பை ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. போட்டியில் பங்கேற்கும் எட்டு அணிகளும் லீக் சுற்றில் தலா 7 ஆட்டங்கள் விளையாடுகின்றன.
மார்ச் 4 அன்று தொடங்கவுள்ள முதல் ஆட்டத்தில் தகுதிச்சுற்றின் வழியாகத் தேர்வாகும் அணியுடன் நியூசிலாந்து அணி மோதவுள்ளது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மார்ச் 5 அன்று ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. இந்திய அணி மார்ச் 6 அன்று தனது முதல் ஆட்டத்தில் தகுதிச்சுற்றில் தேர்வாகும் அணியை எதிர்கொள்கிறது.
ஏப்ரல் 3 அன்று கிறைஸ்ட்சர்ச்சில் இறுதிப்போட்டி நடைபெறுகிறது.
கடந்த வருடம் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் அரசியல் காரணங்களால் நடைபெறவில்லை. இதனால் இரு அணிகளுக்கும் புள்ளிகளைப் பகிர்ந்தளித்தது ஐசிசி. இதன்மூலமாக இந்திய மகளிர் அணி ஒருநாள் உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றது. இதற்கு முன்பு ஆஸ்திரேலியா (37), இங்கிலாந்து (29) மற்றும் தென் ஆப்பிரிக்கா (25) ஆகிய அணிகள் தகுதி பெற்றன. ஐந்தாவது அணியாக இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. 17 புள்ளிகளுடன் உள்ள நியூசிலாந்து அணி, போட்டியை நடத்தும் நாடு என்பதன் அடிப்படையில் ஏற்கெனவே தகுதி பெற்றுள்ளது. இந்த ஐந்து அணிகளோடு மீதமுள்ள 3 அணிகள் தகுதிச்சுற்றின் அடிப்படையில் தேர்வாகவுள்ளன. உலகக் கோப்பைக்கான தகுதிச்சுற்று போட்டி இலங்கையில் 2021 ஜூன் 26 முதல் ஜூலை 10 வரை நடைபெறவுள்ளன.
அடுத்த டி20 உலகக் கோப்பைப் போட்டி தென் ஆப்பிரிக்காவில் 2022-ம் ஆண்டு நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் டி20 உலகக் கோப்பை நடைபெறும் என்று ஐசிசி அறிவித்துள்ளது. 2022-ம் ஆண்டு நியூசிலாந்தில் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையும் அடுத்ததாக இங்கிலாந்தில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியும் நடைபெறுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.