2023 ஒருநாள் உலகக் கோப்பை: தகுதிச்சுற்று ஆட்டங்களை ஜிம்பாப்வே நடத்துகிறது
By DIN | Published On : 17th December 2020 04:22 AM | Last Updated : 17th December 2020 04:22 AM | அ+அ அ- |

துபை: 2023-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆடவருக்கான ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியின் தகுதிச்சுற்று (குவாலிஃபயர்) ஆட்டங்களை அந்த ஆண்டின் ஜூன் 18 முதல் ஜூலை 9-க்கு உள்ளாக ஜிம்பாப்வே நடத்தவுள்ளது.
கரோனா சூழல் காரணமாக சில ஆட்டங்கள் ஒத்தி வைக்கப்பட்டதன் அடிப்படையில் திருத்தப்பட்ட அட்டவணையை தற்போது ஐசிசி வெளியிட்டுள்ளது.
2023 ஒருநாள் உலகக் கோப்பை போட்டியானது இந்தியாவில் அதே ஆண்டு அக்டோபர் - நவம்பரில் நடைபெறவுள்ளது. இதில் மொத்தம் 10 அணிகள் விளையாடவுள்ளன. இந்தியாவுடன் சேர்ந்து சூப்பர் லீக் பிரிவில் முதல் 7 இடங்களில் இருக்கும் அணிகள் நேரடியாக போட்டிக்குத் தகுதிபெறுகின்றன.
சூப்பர் லீக் பிரிவின் கடைசி 5 இடங்களில் இருக்கும் அணிகள் உலகக் கோப்பை குவாலிஃபயரில் விளையாடவுள்ளன. அதேவேளையில் "லீக் 2' பிரிவில் இருக்கும் முதல் 3 அணிகளும் இந்த குவாலிஃபயரில் பங்கேற்கும்.
லீக் 2 பிரிவில் கடைசி 4 இடங்களில் இருக்கும் அணிகளும், "சேலஞ்ச் லீக்' பிரிவின் முதல் இரு அணிகளும் "குவாலிஃபயர் பிளே ஆஃப்'-இல் விளையாடும். அதில் முதல் இரு இடங்களில் வரும் அணிகள் குவாலிஃபயர் சுற்றுக்கு தகுதிபெறும். குவாலிஃபயரில் முதலிரு இடம் பிடிக்கும் அணிகள் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும்.
ஐசிசி அறிவிப்பின்படி, 14 தொடர்களில் விளையாடப்பட இருந்த 96 ஒருநாள் ஆட்டங்கள் கரோனா சூழலால் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. உலகக் கோப்பைக்கான "லீக் 2' போட்டிகள் அடுத்த ஆண்டு மார்ச் 19-ஆம் தேதி தொடங்குகின்றன. "சேலஞ்ச் லீக் ஏ' போட்டிகள் ஆகஸ்ட் 15 முதல் 28 வரையும் "சேலஞ்ச் லீக் பி' போட்டிகள் செப்டம்பர் 1 முதல் 14 வரையிலும் நடைபெறவுள்ளன. இதில் பி பிரிவுக்கான இறுதி ஆட்டம் 2022 பிப்ரவரியிலும், ஏ பிரிவுக்கான இறுதி ஆட்டம் 2022 செப்டம்பரிலும் நடைபெறும்.