ஐஎஸ்எல்: கோவாவை வீழ்த்தியது மோகன் பகான்
By DIN | Published On : 17th December 2020 04:17 AM | Last Updated : 17th December 2020 04:17 AM | அ+அ அ- |

மர்காவ்: இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 30-ஆவது ஆட்டத்தில் ஏடிகே மோகன் பகான் 1-0 என்ற கோல் கணக்கில் எஃப்சி கோவாவை வீழ்த்தியது.
மோகன் பகானுக்கு இது 4-ஆவது வெற்றி; கோவாவுக்கு இது 2-ஆவது தோல்வி.
கோவாவின் மர்காவ் நகரில் புதன்கிழமை விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-ஆவது நிமிடத்தில் மோகன் பகானுக்கு ஃப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. அதை அந்த அணியின் பிரணாய் ஹால்டர் அடிக்க,
கோலாக விடாமல் தலையாமல் முட்டித் தடுத்தார் கோவா வீரர் ஜேம்ஸ் டோனாச்சி.
ஆட்டத்தின் 21-ஆவது நிமிடத்தில் கோவாவுக்கு ஃப்ரீ கிக் கிடைக்க, அதைச் செயல்படுத்தியபோது கோவா வீரர்கள் விதிமீறலில் ஈடுபட்டதாகக் கூறி மோகன் பகானுக்கு மீண்டும் ஃப்ரீ கிக் வாய்ப்பு வழங்கினார் கள நடுவர். ஆனால் அதையும் கோவா வீரர்கள் தடுத்துவிட்டனர். இவ்வாறாக முதல் பாதி ஆட்டம் கோல் இன்றி நிறைவடைந்தது.
பிற்பாதி ஆட்டத்தில் 84-ஆவது நிமிடத்தில் கோலடித்தது மோகன் பகான். அந்த அணியின் ராய் கிருஷ்ணா அப்போது கோல் அடிக்க முன்னேறிச் சென்ற நிலையில், கோவா வீரர் அய்பன் டோலிங் அவரை பிடித்து இழுத்து விழச் செய்தார்.
இதனால் மோகன் பகானுக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கினார் நடுவர். அதை ராய் கிருஷ்ணா தவறாமல் கோலாக்கினார். எஞ்சிய நேரத்தில் கோவாவுக்கு கோல் வாய்ப்பு கிடைக்காததால் மோகன் பகான் வெற்றி பெற்றது.