ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்
By DIN | Published On : 02nd February 2020 08:03 PM | Last Updated : 02nd February 2020 08:03 PM | அ+அ அ- |

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச்சும், ஆஸ்திரிய வீரர் டொமினிக் தீமும் மோதினர். முதல் செட்டை ஜோகோவிச் 6-4 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
ஆனால், அடுத்த இரண்டு செட்களில் தீம் ஆதிக்கம் செலுத்தினார். 2-வது செட்டை 6-4 என்ற கணக்கிலும், 3-வது செட்டை எளிதாக 6-2 என்ற கணக்கிலும் கைப்பற்றி தீம் அசத்தினார். இதனால், ஜோகோவிச் நெருக்கடிக்குள்ளானார்.
இதையடுத்து எழுச்சி கண்ட ஜோகோவிச் 4-வது செட்டை 6-3 என கைப்பற்றினார்.
தொடர்ந்து 5-வது செட்டையும் ஜோகோவிச் 6-4 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
இதன்மூலம் 6-4, 4-6, 2-6, 6-3, 6-4 என்கிற செட் கணக்கில் வெற்றி பெற்ற ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
இந்த வெற்றியின் மூலம் ரஃபேல் நடாலைப் பின்னுக்குத் தள்ளி டென்னிஸ் தரவரிசையில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேற உள்ளார் ஜோகோவிச்.
இது ஜோகோவிச்சின் 17-வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். இதன்மூலம் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்று முதலிரண்டு இடங்களில் உள்ள ரஃபேல் நடால் (19) மற்றும் ரோஜர் பெடரர் (20) ஆகியோரை நெருங்கியுள்ளார்.