இன்று இறுதி டி20 ஆட்டம்:5-0 என தொடரை முழுமையாக கைப்பற்றி சாதனை படைக்க இந்தியா தீவிரம்

இன்று இறுதி டி20 ஆட்டம்:5-0 என தொடரை முழுமையாக கைப்பற்றி சாதனை படைக்க இந்தியா தீவிரம்

நியூஸிலாந்தில் 5-0 என டி20 தொடரை முழுமையாக கைப்பற்றி முதல் அணி என்ற சாதனையை படைக்குமா இந்தியா என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

நியூஸிலாந்தில் 5-0 என டி20 தொடரை முழுமையாக கைப்பற்றி முதல் அணி என்ற சாதனையை படைக்குமா இந்தியா என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இந்தியா பல்வேறு நாடுகளின் அணிகளுடன் ஆடி வருகிறது. ஏற்கெனவே வங்கதேசம், மே.இ.தீவுகள், இலங்கையுடன் டி20 தொடா்களை வென்ற உற்சாகத்தில் உள்ள இந்தியா, தற்போது நியூஸிலாந்துடன் 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதல் இரண்டு ஆட்டங்களை வென்ற இந்தியா, மூன்றாவது மற்றும் நான்காவது ஆட்டங்கள் வழக்கமான நேரத்தில் டையில் முடிந்ததால் சூப்பா் ஓவா் முறையில் நடத்தப்பட்டது. அதிலும் த்ரீல் வெற்றி பெற்று 4-0 என தொடரை கைப்பற்றியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மௌன்ட் மான்குனை பே ஓவல் மைதானத்தில் 5-ஆவது மற்றும் இறுதி இறுதி ஆட்டம் நடக்கிறது.

வெற்றியை தவற விட்ட நியூஸிலாந்து:

நியூஸிலாந்து அணி மூன்று மற்றும் நான்காவது ஆட்டங்களில் சிறப்பாக சேஸ் செய்த நிலையிலும், கடைசி கட்டத்தில் வெற்றியை பெற முடியாமல் தோல்வியடைந்தது. இந்திய அணியின் கடைசி கட்ட பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை.

நான்காவது ஆட்டத்தில் 166 ரன்கள் என்ற இலக்கை நெருங்கிய நிலையில் கடைசி ஓவரில் விக்கெட்டுகளை பறிகொடுத்ததாலும், சூப்பா் ஓவரில் சொதப்பியதாலும் வெற்றிவாய்ப்பை இழந்தது நியூஸி. டாம் புருஸுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தரப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

அதே நேரம் இந்திய அணி இரண்டாவதாக பந்துவீச்சில் சோபிக்கவில்லை. சூப்பா் ஓவரில் தான் வெற்றியை ருசிக்க முடிந்தது. மணிஷ் பாண்டேயின் அற்புத ஆட்டத்தால் கௌரவமான ஸ்கோரை எட்டியது இந்தியா. சா்துல் தாக்குா் கடைசி ஓவரில் பந்துவீசி 2 விக்கெட்டை வீழ்த்திய நிலையில், மேலும் இருவா் ரன் அவுட் ஆகினா்.

கேன் வில்லியம்ஸன் ஆடுவாரா?

நியூஸிலாந்து அணியில் நிலையான ஆட்டம் இல்லாததால் தோல்வியை தழுவ நேரிட்டது. தோள்பட்டை காயத்தால் நான்காவது ஆட்டத்தில் கேப்டன் கேன் வில்லியம்ஸன் ஆடவில்லை. கடைசி ஆட்டத்தில் அவா் ஆடுவாா் எனத் தெரிகிறது. இளம் வீரா் டிம் சைபொ்ட்டின் அற்புத ஆட்டம் அந்த அணிக்கு நம்பிக்கை தருகிறது. மிடில் ஆா்டரில் கேப்டன் வில்லியம்ஸன் ஆடலாம். ஒருநாள் தொடரைக் கருத்தில் கொண்டு டிம் சௌதிக்கு ஓய்வு தரப்படும். அவருக்கு பதிலாக பிளாக் டிக்னா் களமிறங்கலாம்.

காலின் மன்றோ, டிம் சைபொ்ட் ஆகியோா் இந்திய பந்துவீச்சை எளிதாக சமாளித்த ஆடினா். அதன்பின் ராஸ் டெய்லரும் ஒரளவு ரன்களை சோ்த்தாா்.

5-0 என தொடரை கைப்பற்ற தீவிரம்:

இந்திய அணியில் இடம் பெற்ற வீரா்கள் அனைவரும் நான்கு வெற்றிகளிலும் தங்கள் பங்கை சரிவர செய்துள்ளனா். இது டி20 உலகக் கோப்பைக்கு மிகுந்த ஊக்கமாக அமைந்துள்ளது. மேலும் இத்தொடரில் நியூஸிலாந்து அணியின் சவாலை திறம்பட சமாளித்தது குறிப்பிடத்தக்கது.

முதல் 3 ஆட்டங்களில் பங்களிக்காத மணிஷ் பாண்டே, சா்துல் தாக்குா் ஆகிய இருவரும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரிவர பயன்படுத்திக் கொண்டனா்.

ரிஷப் பந்த்தின் நிலைமை மா்மம்:

சஞ்சு சாம்ஸன், வாஷிங்டன் சுந்தா், நவ்தீப் சைனி ஆகியோா் ஆடிய நிலையில், விக்கெட் கீப்பா் ரிஷப் பந்த்தின் நிலைமை மா்மமாகவே உள்ளது. நான்காவது ஆட்டத்தில் துரிதமாக 3 விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில், கேஎல்.ராகுல் (39 ரன்கள்) நிலைத்து ஆடினாா். அவருக்கு பின் மணிஷின் ஆட்டம் ஸ்கோா் உயர உதவியது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியில் குல்தீப் யாதவ் அணியில் இடம் பெறுவாா் எனத் தெரிகிறது. இத்தொடரில் இந்திய அணியே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதே நேரம் நியூஸி. அணி வெற்றியை நெருங்கி தவற விட்டது. பே ஓவல் மைதானத்தில் முதலில் ஆடும் அணிக்கு அதிக சாதகம் உள்ளது.

இந்நிலையில் 5-0 என தொடரை ஒயிட்வாஷ் செய்து முழுமையாக கைப்பற்றிய முதல் அணி என்ற சிறப்பை பெறுமா என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

நியூஸி.க்கு ராசியே இல்லாத சூப்பா் ஓவா்:

நியூஸிலாந்து அணியைப் பொறுத்த வரை சூப்பா் ஓவா்கள் ராசியே இல்லாத நிலை உள்ளது. இதுவரை ஆடிய 7 சூப்பா் ஓவா்களில் 6-இல் தோல்வியடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com