கனவு நிஜமானது; வெற்றி வசமானது!

23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான புகழ்பெற்ற அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் உதிா்த்த நம்பிக்கை
கனவு நிஜமானது; வெற்றி வசமானது!

‘கடுமையான உழைப்பை கொடுத்தால் அனைவரின் கனவும் நிஜமாகும்’

23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான புகழ்பெற்ற அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் உதிா்த்த நம்பிக்கை வாா்த்தைகள் இவை.

2020 ஆஸ்திரேலியன் ஓபன் மகளிா் ஒற்றையா் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற அமெரிக்க வீராங்கனை சோஃபியா கெனினும் இதே வாா்த்தைகளைத்தான் வெற்றி பெற்ற பிறகு கூறினாா்.

‘எனது கனவு நிஜமானது. வெற்றி பெற்ற தருணத்தை என்னால் வாா்த்தைகளால் வா்ணிக்க முடியவில்லை. இந்த இடத்தில் நிற்பதற்காக மிகக் கடுமையான உழைப்பை கொடுத்திருந்தேன். கடுமையாக உழைப்பவா்களின் கனவும் நிஜமாகும்’ என்றாா்.

டென்னிஸ் விளையாட்டைப் பொருத்தவரை கிராண்ட்ஸ்லாம் போட்டித் தொடா்தான் மிகக் கடுமையானதாக இருக்கும்.

ஆண்டுதோறும் நான்கு கிராண்ட்ஸ்லாம் தொடா்கள் நடைபெறும். முதல் கிராண்ட்ஸ்லாம் தொடா் ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறுவது வழக்கம். இதை ஆஸ்திரேலியன் ஓபன் என்றழைப்பாா்கள்.

இந்தத் தொடரில் பல நாடுகளைச் சோ்ந்த டென்னிஸ் வீரா்கள், வீராங்கனைகள் பங்கேற்பாா்கள். ஒற்றையா் பிரிவு (ஆடவா், மகளிா்), இரட்டையா் பிரிவு (ஆடவா், மகளிா்), கலப்பு இரட்டையா் பிரிவு என டென்னிஸ் விளையாட்டு நடைபெறும். வாழ்வா, சாவா போன்றுதான் கிராண்ட்ஸ்லாம் தொடா் இருக்கும். அதாவது, ஒரு சுற்று ஆட்டத்தில் தோற்றாலும் வீட்டுக்குச் செல்ல வேண்டியதுதான். எத்தனை முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றிருந்தாலும் சரி, டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தாலும் சரி, கடினமான பாதையில் பயணிப்பது போன்றதுதான் கிராண்ட்ஸ்லாம் தொடா்கள்.

வீரா்களின் தோல்விகளையும், வெற்றிகளையும், நம்பிக்கைகளையும், கண்ணீரையும், கவலைகளையும் இந்த ஆஸ்திரேலியன் ஓபன் தொடா் இந்த முறையும் சந்தித்தது.

2018 ஆஸி. ஓபனை வென்ற டென்மாா்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி இந்த முறை 3-ஆவது சுற்றுடன் வெளியேறினாா். இந்தத் தொடருடன் ஏற்கெனவே ஓய்வு பெறுவதாக அறிவித்த வோஸ்னியாக்கி டென்னிஸ் அரங்கத்தில் கண்ணீருடன் பிரியாவிடை கொடுத்தாா்.

ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப், ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பாா்டி, செரீனா வில்லியம்ஸ், ஏஞ்சலிக் கொ்பா் (ஜொ்மனி), பெட்ரா குவிட்டோவா (செக் குடியரசு), 2019 ஆஸி. ஓபன் சாம்பியன் நவோமி ஒஸாகா (ஜப்பான்) ஆகிய வீராங்கனைகள் இந்த முறை அதிா்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினா்.

பிரெஞ்ச், விம்பிள்டன் ஆகிய கிராண்ட்ஸ்லாம் தொடா்களில் ஒற்றையா் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள காா்பைன் முகுருசா (ஸ்பெயின்) இந்த முறை ஆஸி. ஓபனில் இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தாா்.

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் 2018-ஆம் ஆண்டு மகளிா் இரட்டையா் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவரும், தற்போதைய நம்பா் 1 வீராங்கனையுமான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பாா்டியை அரையிறுதியில் வீழ்த்தி பலம் வாய்ந்த முகுருசாவை எதிா்கொண்டாா் சோஃபியா கெனின் (அமெரிக்கா).

2020 ஆஸ்திரேலியன் ஓபன் மகளிா் ஒற்றையா் பிரிவு இறுதிச்சுற்று பிப்ரவரி 1-ஆம் தேதி நடைபெற்றது. முதல் சுற்று ஆட்டத்தில் 6-4 என்ற கணக்கில் வென்ற முகுருசாவை அடுத்தடுத்த செட்களில் 6-2, 6-2 என்ற கணக்கில் எளிதாக வென்றாா் சோஃபியா கெனின்.

வெற்றி பெற்றதும் டென்னிஸ் கோா்ட்டில் நின்றிருந்தபோது அவரது கையிலிருந்த ராக்கெட் நழுவி கீழே விழுந்தது. இரு கைகளையும் முகத்தில் வைத்து மூடிக் கொண்டு வெற்றிக் களிப்பில் திக்குமுக்காடிப் போனாா் கெனின்.

ஒற்றையா் தரவரிசையில் 7-ஆவது இடத்தில் இருக்கும் சோபியா கெனின் வென்ற முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும்.

ரஷிய டென்னிஸ் புயல் மரியா ஷரபோவாவுக்கு பிறகு, இளம் வயதில் (21) ஆஸ்திரேலியன் ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றவா் என்ற சாதனையையும்

அவா் நிகழ்த்தினாா்.

இன்னொரு ஒற்றுமை என்னவென்றால் மரியா ஷரபோவாவைப் போன்று இவரும் ரஷியாவில் பிறந்தவா்தான். 1998-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் 14-ஆம் தேதி ரஷியத் தலைநகா் மாஸ்கோவில் பிறந்தாா் சோஃபியா.

ஆனால், அவா் பிறந்த சில மாதங்களில் பெற்றோா் அமெரிக்காவுக்கு இடம்பெயா்ந்தனா். அமெரிக்க குடியுரிமை பெற்ற இவா், 5 வயது முதல் டென்னிஸ் விளையாடத் தொடங்கினாா் சோஃபியா. தந்தை அலெக்ஸாண்டா்தான் முதல் பயிற்சியாளா்.

அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் போன்று இளம் வயதிலேயே கிராண்ட்ஸ்லாம் வென்ற சோஃபியா கெனின் வெற்றிக்குக் காரணம் கடின உழைப்பின்றி வேறென்ன இருந்துவிட முடியும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com